கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, 2026 மே 02 முதல் 05 வரை நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக மியான்மருக்கு சென்றுள்ளார் .
இந்தப் பயணத்தின் போது, கடற்படைத் தளபதி, மியான்மர் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் யே வின் ஊ, மியான்மரின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் யூ ஹ்டூன் ஆங், மியான்மர் கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் ஹ்டெய்ன் வின் மற்றும் மியான்மர் ஆயுதப் படைகளின் பிற மூத்த அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார். இந்த கலந்துரையாடல்கள், நடைபெற்று வரும் இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்யவும், செயல்பாட்டு அளவிலான இணைப்புகளை மேம்படுத்தவும், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்கும் .
இந்தப் பயணத்தில், மியான்மர் கடற்படையின் மத்திய கடற்படைக் கட்டளை மையம், கடற்படைப் பயிற்சிக் கட்டளை மையம் மற்றும் எண் 1 கடற்படை ஆகியவற்றில் நடைபெறும் சந்திப்புகளும், மியான்மர் ஆயுதப் படைகளின் வீரமரணம் அடைந்தோர் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைப்பதும் அடங்கும். இந்தச் சந்திப்புகள், கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, ஆற்றல் அதிகரிப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பரந்த அளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயங்களை உள்ளடக்கும்.
இந்தியக் கடற்படையானது, பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டம், பணியாளர் பேச்சுவார்த்தைகள், பயிற்சிப் பரிமாற்றங்கள் மற்றும் இந்தியா – மியான்மர் கடற்படைப் பயிற்சி (IMNEX), இந்திய-மியான்மர் ஒருங்கிணைந்த ரோந்து (IMCOR), துறைமுகப் பயணங்கள் மற்றும் நீரியல் ஆய்வுகள் உள்ளிட்ட செயல்பாட்டுத் தொடர்புகள் மூலம் மியான்மர் கடற்படையுடன் தொடர்ந்து கலந்துரையாடுகிறது. மேலும், இரு கடற்படைகளும் தொடர்ந்து பயிற்சிப் பரிமாற்றங்களை முன்னெடுத்து, பலதரப்பு மன்றங்களில் ஈடுபட்டு, திறன் மேம்பாட்டிற்காக இணைந்து செயல்படுகின்றன . இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கம், மிலன், சர்வதேசக் கடற்படை அணிவகுப்பு, கோவா கடல்சார் மாநாடு/கருத்தரங்கம், ஐஓஎஸ் சாகர் மற்றும் அட்மிரல் கோப்பை போன்ற இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட அனைத்து சமீபத்திய நிகழ்வுகளிலும் மியான்மர் பங்கேற்றுள்ளது .
கடற்படைத் தலைமைத் தளபதியின் இந்தப் பயணம், பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, இந்தியா – மியான்மர் இடையேயான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
எம்.பிரபாகரன்
