அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், வேகமாக மாறிவரும் ஆட்சிச் சூழலுக்கு, திறமையான பொது நிர்வாகத்திற்காக விரைவான தகவமைப்பும், தொடர்ச்சியாகக் கற்கும் திறனும் அவசியமாகிறது. ஏனெனில், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பின்னணியில் இன்று பெறப்படும் அறிவு விரைவில் பொருத்தமற்றதாகிவிடும். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இந்த மாற்றம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் (IIPA) நடைபெற்ற 51வது மேம்பட்ட தொழில்முறை பொது நிர்வாகத் திட்டத்தின் (APPPA) பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். 1975-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பொது நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டத்திற்கு வழிவகுக்கும் IIPA-வின் ஒரு முதன்மைத் திறன் மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்நிகழ்ச்சியில், IIPA-வின் தலைமை இயக்குநர் டாக்டர் பர்கடே, பேராசிரியர் சுர்பி பாண்டே, டாக்டர் சச்சின் சௌத்ரி, பேராசிரியர் ரவி சக்லானி மற்றும் அகில இந்திய, மத்திய சேவைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், முப்படைகள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆளுகையின் மாறிவரும் தன்மையை வலியுறுத்திப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இன்றைய நிர்வாகம் தொழில்நுட்பத்தால் அதிகளவில் இயக்கப்படுகிறது என்றும், அதே நேரத்தில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன என்றும் கூறினார். கணிக்க முடியாத மற்றும் மாறும் தன்மையுடைய சவால்களைச் சமாளிக்க, பொது நிர்வாகம் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலம் மட்டுமல்லாமல், அதிகாரிகளிடையே மனப்பான்மையைத் தொடர்ச்சியாக மறுசீரமைப்பதன் மூலமும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வளர்ந்து வரும் ஆளுகை முன்னுதாரணத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், கவனம் ‘அரசு’ என்பதிலிருந்து ‘ஆளுகை’ என்பதற்கும், மேலும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை’ என்பதை நோக்கியும் நகர்ந்துள்ளது என்றும், இதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
திறன் மேம்பாட்டின் பங்கை எடுத்துரைத்த அமைச்சர், கொள்கை அமலாக்கத்திற்குத் தேவையான துறைசார் அறிவு மற்றும் நடைமுறைத் திறன்கள் ஆகிய இரண்டையும் மூத்த அதிகாரிகளுக்கு வழங்குவதில், பல தசாப்தங்களாக APPPA திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்றார். இந்தத் திட்டம், ‘அமிர்த காலத்தில்’ பொறுப்புமிக்க மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஆட்சியை வழங்குவதற்காக அரசு ஊழியர்களிடையே திறன்களை வளர்க்க முற்படும் ‘கர்மயோகி இயக்கம்’ உடன் ஒத்துப்போகிறது என்றும் அவர் கூறினார்.
வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சித் திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். மேலும், பங்கேற்கும் அதிகாரிகளின் எதிர்பார்ப்புகளுடன் பாடத்திட்ட வடிவமைப்பைச் சிறப்பாகச் சீரமைக்க, அநாமதேய பின்னூட்ட வழிமுறைகள் உட்பட, ஊடாடும் மற்றும் பின்னூட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளை அதிக அளவில் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார்.
தற்காலத்தில், ஒரு முக்கிய நிர்வாகத் திறனாகத் திறம்படத் தொடர்புகொள்வதன் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், பெருகிவரும் தொடர்புகளின் சூழலில், நவீன ஆட்சிமுறையானது அதிகாரிகள் குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் திறம்பட ஈடுபட வேண்டும் என்பதை அவசியமாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலட்சிய மாவட்டங்கள் திட்டம் போன்ற ஆளுகை சார்ந்த புதுமைகளைக் குறிப்பிட்ட அவர், போட்டித்தன்மை வாய்ந்த, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த மாதிரியானது, பல்வேறு துறைகளில் அளவிடக்கூடிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது என்றும், தற்போது இது மேலும் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து, விளைவு சார்ந்த ஆளுகையை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் கூறினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிடுகையில், APPPA திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அகில இந்திய மற்றும் மத்திய சேவைகளைச் சேர்ந்த 1,700-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது. இதில் ஆயுதப் படைகள், மாநில சேவைகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் அடங்குவர். அவர்களில் பலர் பின்னர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்துள்ளனர்.
பங்கேற்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைப்பாளர்களைப் பாராட்டிய அவர், APPPA போன்ற திட்டங்கள் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, பெருகிவரும் சிக்கலான ஆளுகைச் சூழலில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்ய அதிகாரிகளைத் தயார்படுத்துகின்றன என்றும் கூறினார்.
திவாஹர்
