மேற்காசியாவில் நிலவி வரும் சூழல் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை.

மேற்காசியாவில் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, மத்திய அரசு மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக இன்று புது தில்லி தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து, வெளியுறவு அமைச்சகங்கள் பங்கேற்றன. இதில் நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் மற்றும் முக்கிய துறைகளில் நிலைத்தன்மையை பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்த தகவல்களை அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கினர்.

ஜவுளி மற்றும் கைவினை உற்பத்தித் துறை குறித்த தகவல்கள்:

மேற்காசியாவில் நிலவி வரும் நெருக்கடியான சூழல் காரணமாக ஜவுளி மற்றும் கைவினை உற்பத்தித்துறை எதிர்கொண்டு வரும் பல்வேறு சிக்கல்கள் குறித்து மத்திய ஜவுளி அமைச்சகம் பல்வேறு தரப்பினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இத்துறையின் சீரான செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில், அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டறிய ஏதுவாக கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி துறைக்கான தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் விநியோகத்தில் ஏற்படும் தடைகளுக்கு உடனடி தீர்வுகாணும் வகையில் கெயில் நிறுவனத்தின் மூலம் உடனடி சந்தை வாய்ப்புகளை கண்டறிந்து விநியோக நடவடிக்கைகளை சீராக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விநியோகத்தில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கண்காணிப்புக் குழு அதற்கான காரணங்களை கண்டறிந்து கெயில் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வகை செய்கிறது. ஜவுளி மற்றும் கைவினைப் பொருள் உற்பத்தி துறையில் மூலக்கூறுகளுக்கான சுங்க வரிக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய ஜவுளி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஜவுளித்துறையில் பல்வேறு மூலப் பொருட்களுக்கான சுங்கவரிக்கு விலக்கு அளிப்பது தொடர்பான சுங்கத்துறை அறிவிக்கை ஏப்ரல் முதல் தேதியன்று வெளியிடப்பட்டது.

ஜவுளித்துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், சில பொருட்களுக்கு கூடுதல் கையிருப்பு வைத்திருக்க ஏதுவாக இறக்குமதியிலிருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு குடும்பங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை 99 சதவீதமாக அதிகரித்துள்ளது. விநியோக அங்கீகார குறியீட்டின் அடிப்படையில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் 93 சதவீதம் அளவுக்கு நேரடியாக பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்கிறது. இந்த விநியோக அங்கீகார குறியீடு நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது.

பாரசீக வளைகுடாவில் நிலவி வரும் கடல்சார் சூழல் குறித்த அண்மைக்கால தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் பாரசீக வளைகுடா கடற்பகுதி வழியாக இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply