பயங்கரவாதத்தின் மையங்கள் இனி நியாயமான தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற இந்தியாவின் உறுதியான தீர்மானத்தை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிரூபித்துள்ளது,” என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஏப்ரல் 28, 2026 அன்று கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் கூறினார். மேலும், பாதுகாப்பான புகலிடங்களை ஒழித்து, எந்தவொரு அரசியல் விதிவிலக்குகளையும் நிராகரிப்பதன் மூலம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகிய “தீமைகளை” எதிர்கொள்ள ஒரு ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஒரு நாட்டின் இறையாண்மையைத் தாக்கும், அரசால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மீதான பார்வையை இழக்கக் கூடாது என்றும், இரட்டை நிலைப்பாடுகளுக்கு இங்கு இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
பயங்கரவாதிகளுக்குத் துணை நிற்பவர்கள், அடைக்கலம் கொடுப்பவர்கள் மற்றும் பாதுகாப்பான புகலிடங்களை வழங்குபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தயங்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். “பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை விதிவிலக்கின்றி எதிர்கொள்வதன் மூலம், பிராந்தியப் பாதுகாப்பை ஒரு சவாலிலிருந்து அமைதி மற்றும் செழிப்புக்கான ஒரு மூலக்கல்லாக நாம் மாற்றுகிறோம்,” என்று அவர் கூறினார்.
பயங்கரவாத எதிர்ப்பு என்பது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) ஒரு அடிப்படைக் கொள்கை என்று விவரித்த திரு. ராஜ்நாத் சிங், இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில், அத்தகைய செயல்களையும் சித்தாந்தங்களையும் தங்கள் அமைப்பு கண்டித்துள்ளது என்று கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான மற்றும் கூட்டு நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கடந்த ஆண்டு தியான்ஜின் பிரகடனத்தை அவர் நினைவு கூர்ந்தார். பயங்கரவாதம் மற்றும் அதன் குற்றவாளிகள் மீதான நாட்டின் சகிப்புத்தன்மையற்ற கண்ணோட்டத்திற்கு அது ஒரு சான்றாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். “கூட்டு நம்பகத்தன்மையின் உண்மையான சோதனை என்பது நிலைத்தன்மையில்தான் உள்ளது. பயங்கரவாதத்திற்கு தேசியம் இல்லை, இறையியல் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் கூட்டு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
திவாஹர்
