பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 2026 ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிக்கிமுக்கு பயணம் மேற்கொள்வார். அவர் ஏப்ரல் 27 அன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் கேங்டாக்கிற்கு வந்தடைவார். ஏப்ரல் 28 அன்று, காலை சுமார் 9:30 மணியளவில், பிரதமர் கேங்டாக்கில் உள்ள ஆர்க்கிடேரியத்தைப் பார்வையிடுவார். மாநிலத்தின் சூழலியல் மற்றும் மலர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், ஸ்வர்ணஜயந்தி மைத்ரி மஞ்சுரி பூங்கா ஒரு அதிநவீன, உலகத் தரம் வாய்ந்த ஆர்க்கிட் அனுபவ மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை சுமார் 10 மணியளவில், பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும் சிக்கிமின் 50வது மாநில அந்தஸ்து ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பார். அங்கு அவர், மாநிலம் முழுவதும் ₹4,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார். மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதமர் அங்கு கூடியிருப்போர் மத்தியில் உரையாற்றுவார்.
இந்தத் திட்டங்கள் உள்கட்டமைப்பு, இணைப்பு வசதி, சுகாதாரம், கல்வி, மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதோடு, சிக்கிமில் முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
சுகாதாரத் துறையில், நாம்ச்சி மாவட்டம் யாங்காங்கில் 100 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். மேலும், தியோராலி என்.ஐ.டி-யில் 30 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த சோவா ரிக்பா மருத்துவமனையையும் அவர் திறந்து வைப்பார். இதன் மூலம், மாநிலத்தில் பாரம்பரிய மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளுக்கான அணுகல் வலுப்படுத்தப்படும்.
கல்வித் துறையில், யாங்காங்கில் உள்ள சிக்கிம் பல்கலைக்கழகத்தின் நிரந்தர வளாகம், சகுங்கில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறப்புப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடம், காங்டாக் மாவட்டத்தில் உள்ள சோச்சேகாங்கில் உள்ள ஹெலன் லெப்சா மருத்துவக் கல்லூரி மற்றும் கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள டென்டாமில் உள்ள டென்டாம் தொழில்முறைக் கல்லூரி ஆகியவற்றை பிரதமர் திறந்து வைப்பார். மேலும், ஹீ கியாத்தாங்கில் மாதிரி உறைவிடப் பள்ளிகள், மாங்கன் மாவட்டத்தில் உள்ள மாங்ஷிலாவில் ஒரு புதிய மாதிரி பட்டக் கல்லூரி மற்றும் நாம்ச்சி மாவட்டத்தில் உள்ள பூம்தார் கும்பாவில் ஒரு துறவிகள் தங்கும் விடுதி-வகுப்பறை ஆகியவற்றையும் அவர் திறந்து வைப்பார். அதுமட்டுமின்றி, சிக்கிமில் உள்ள 160 பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைப்பார்.
சிக்கிமில் இணைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், நாம்ச்சி மற்றும் காங்டாக் மாவட்டங்களை இணைக்கும் விதமாக, சிர்வானி மற்றும் லோயர் சம்டாங் ஆகிய இடங்களில் டீஸ்டா ஆற்றின் மீது அமையவிருக்கும் இரண்டு மடிப்பு இரட்டை வழி எஃகு வளைவுப் பாலங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். மேலும், பிர்தாங்கிலிருந்து கிட்சுடும்ரா வழியாக நாம்ச்சிக்குச் செல்லும் சாலையை அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி வைப்பார். இது மாவட்டங்களுக்கு இடையேயான அணுகலை மேம்படுத்தி, பயணத் திறனை அதிகரித்து, மக்கள் மற்றும் பொருட்களின் தடையற்ற போக்குவரத்திற்கு வழிவகுக்கும்.
மின்சாரத் துறையில், காங்டாக்கில் உள்ள மின்பரிமாற்ற மற்றும் விநியோக (T&D) வலையமைப்பின் மேம்பாடு, தரம் உயர்த்துதல் மற்றும் சீரமைத்தல் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைப்பார். இதன் மூலம் அப்பகுதியில் நம்பகமான மின்சார விநியோகம் வலுப்படுத்தப்படும்.
நகர்ப்புற மேம்பாடு மற்றும் நிர்வாக உள்கட்டமைப்புத் துறையில், பிரதமர் லும்சேயில் ஜன சேவா சச்சிவாலயத்தையும் (மினி செயலகம்) மற்றும் காங்டாக்கில் குடிமைப் பணி அலுவலர்கள் பயிற்சி நிறுவனத்தையும் திறந்து வைப்பார். மேலும், லிங்டிங்கில் சிக்கிம் நகர்ப்புற கரீப் ஆவாஸ் யோஜனா, காவல்துறைப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் எஸ்ஏபி பாங்தாங்கில் ‘சி’ கிரேடு குடியிருப்புகள் உள்ளிட்ட வீட்டுவசதித் திட்டங்களையும் அவர் திறந்து வைப்பார். இது தவிர, எம்.ஜி. மார்க்கில் சத்பாவ் மண்டபத்திற்கு (பொதுப் பயன்பாட்டு மையம்) அவர் அடிக்கல் நாட்டுவார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆற்று மாசு குறைப்பு முன்னெடுப்புகளின் கீழ், சிங்டாம் நகரில் கழிவுநீர் அமைப்பு புனரமைப்புப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். மேலும், மேம்பட்ட நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நிலையான சூழல் அமைப்புகளுக்குப் பங்களிக்கும் வகையில், கேங்டாக்கின் மண்டலம் III-இல் உள்ள ரோரோ சூ ஆற்றின் வழியாக ராணி சூ ஆற்றின் மாசு குறைப்புத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார்.
சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் துறையில், கேங்டாக்கில் உள்ள ரிட்ஜ் பிரசிங்க்ட் மறுசீரமைப்பு, சோரெங்கில் உள்ள டோடாக்கில் சூழல் சுற்றுலா மற்றும் புனித யாத்திரை உள்கட்டமைப்பு, 18வது மைல் மற்றும் ஹங்கு ஏரியில் உள்ள வசதிகள் உள்ளிட்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பான உள்கட்டமைப்பு, மற்றும் நாம்பிங்கில் உள்ள கிருஷ்ண பிரணமி மங்கல்தாமில் ஒரு யாத்ரி நிவாஸ் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைப்பார். மேலும், கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள சில்னானில் ஒரு சூழல் புனித யாத்திரை வளாகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.
மாநிலத்தில் வேளாண் பதப்படுத்துதலுக்குப் பெரும் ஊக்கமளித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மதிப்புச் சங்கிலிகளையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் சிக்கிம் ஐஎஃப்எஃப்கோ பதப்படுத்தும் ஆலையை பிரதமர் திறந்து வைப்பார். மேலும், இளைஞர்களின் ஈடுபாட்டையும் விளையாட்டு மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில், பாக்யோங் மாவட்டத்தில் உள்ள ரங்போ, மைனிங்கில் உள்ளரங்க கிரிக்கெட் வசதிகளையும் பிரதமர் திறந்து வைப்பார்.
பிரதமரின் இந்தப் பயணம், சிக்கிம் மாநிலம் உருவான பொன்விழா ஆண்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதோடு, மாநிலம் மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தின் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சிக்குத் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
திவாஹர்
