2025–26 ஆம் ஆண்டுக்கான கோதுமை உற்பத்தி நிலவரம் குறித்த சில ஊடக அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், தற்போதைய கோதுமைப் பருவமானது , காலநிலை சார்ந்த பாதகமான சூழல்கள் மற்றும் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட வலுவான தகவமைப்பு நடவடிக்கைகள் ஆகிய இரண்டின் காரணமாகவும், கலவையான ஆனால் மீள்திறன் கொண்ட ஒன்றாக வகைப்படுத்தப்படலாம் என்று தெளிவுபடுத்தப்படுகிறது .
சுமார் 33.4 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் விதைக்கப்பட்ட கோதுமைப் பயிரில், இந்தப் பருவத்தில் பூச்சித் தொல்லைகளோ நோய்களோ ஏற்படவில்லை. நாட்டில் கோதுமையை முன்கூட்டியே மற்றும் சரியான நேரத்தில் விதைத்ததால், கடந்த ஆண்டை விட சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளது.
பருவத்தின் பிற்பகுதியில், பிப்ரவரி மாதத்தில் நிலவிய வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பநிலை, பயிரை வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாக்கி, தானியம் முதிர்ச்சியடையும் காலத்தையும் மகசூலையும் குறைத்தது. மேலும், சில பகுதிகளில் பயிர் முதிர்ச்சியடையும் நேரத்தில் பெய்த பருவம் தவறிய மழை மற்றும் ஆலங்கட்டி மழையானது, தானியத்தின் தரம் மற்றும் மகசூலில் குறிப்பிட்ட பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
இருப்பினும், பல்வேறு ஈடுசெய்யும் காரணிகளால் ஒட்டுமொத்த உற்பத்தி குறித்த கண்ணோட்டம் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையூட்டுவதாகவே உள்ளது.
கோதுமைப் பயிரில் எந்தவொரு நோய் அல்லது பூச்சியினால் மகசூல் இழப்பு ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை. மேலும், பயிர் வளர்ச்சிப் பருவங்களில் களைகளின் பாதிப்பும் குறைவாகவே இருந்தது.
முன்கூட்டியே/சரியான நேரத்தில் விதைப்பது கணிசமாக அதிகரித்துள்ளது, இது தானியங்கள் முதிர்ச்சியடையும் போது ஏற்படும் இறுதி வெப்பத்திலிருந்து பயிரைத் தப்பிக்க உதவுகிறது.
2025-26 ஆம் ஆண்டில் கூடுதலாக நடப்பட்ட 0.6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு, உள்ளூர் இழப்புகளை ஓரளவு ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேம்படுத்தப்பட்ட இரக மாற்று விகிதமானது (VRR), அதிக மகசூல் தரும், பருவநிலையைத் தாங்கக்கூடிய மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களைப் பின்பற்றுவதை வேகப்படுத்தியுள்ளது; இவை வெப்பம் மற்றும் உயிரியல் அழுத்தங்களைத் தாங்குவதற்குச் சிறந்த முறையில் தகுதி பெற்றுள்ளன.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, வானிலை சீர்குலைவுகளின் பாதகமான விளைவுகள், சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு, முன்கூட்டிய விதைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட இரகத் தத்தெடுப்பு ஆகியவற்றால் பெருமளவில் ஈடுசெய்யப்பட்டு, அதன்மூலம் 2024-25ஆம் ஆண்டு பயிர் பருவத்துடன் ஒப்பிடுகையில் நிலையான தேசிய கோதுமை உற்பத்திக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்முதல் மற்றும் வருகைப் போக்குகள்
முக்கிய மாநிலங்களில் உற்பத்தி வலுவாக உள்ளதை கொள்முதல் தரவுகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன:
ஹரியானா மண்டிகளுக்கு கோதுமை வரத்து , அரசின் 75 லட்சம் டன் கொள்முதல் இலக்கைத் தாண்டியுள்ளது. ஏற்கனவே 56.13 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், கொள்முதல் சுமார் 9 லட்சம் டன் அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், ஆரம்பத்தில் 78 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிக உற்பத்தி மதிப்பீடுகள் காரணமாக மாநில அரசின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அது அதிகாரப்பூர்வமாக 100 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் 2025-26 ஆம் ஆண்டுக்கான கோதுமை உற்பத்தி, சமீபத்திய ஆண்டுகளைக் காட்டிலும் சீராக அதிகரித்து, சுமார் 22.90 லட்சம் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் மாத இறுதியில், குறிப்பாக மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளிலிருந்து மாநிலத்திற்கு சீரான வரத்து இருந்து வருகிறது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட பகுதிகளில் வானிலை தொடர்பான பாதிப்புகள் காணப்பட்டபோதிலும், அதிகரிக்கப்பட்ட சாகுபடிப் பரப்பு, மேம்படுத்தப்பட்ட வேளாண் நடைமுறைகள் மற்றும் அதிகளவில் புதிய இரகங்களைத் தழுவுதல் ஆகியவற்றின் ஆதரவுடன், 2025–26 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த கோதுமை உற்பத்திச் சூழல் நிலையானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும் நீடிக்கிறது என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
எம்.பிரபாகரன்
