புது தில்லி, ஏப்ரல் 26: இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விண்வெளி ஆய்வகங்களை அமைப்பதற்கான திட்டங்களை மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஆய்வு செய்தார். இதன் முதல் கட்டமாக, செயற்கைக்கோள் அமைப்புகள், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் திட்ட வடிவமைப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கும் வகையில் ஏழு ஆய்வகங்கள் நிறுவப்படவுள்ளன.
அரசு சாரா நிறுவனங்களுக்கு இத்துறை திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தனியார் முதலீட்டை ஈர்த்துள்ள இந்தியாவின் விரிவடைந்து வரும் விண்வெளித் துறைக்கு, திறமையான இளைஞர்களின் வலுவான தொடர் வரத்தை உருவாக்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐஎன்-ஸ்பேஸ் (IN-SPACe) அமைப்பின் தலைவர் டாக்டர் பவன் கோயங்கா வழங்கிய விரிவான விளக்கத்தைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றது. அவர், இந்தியாவின் விண்வெளி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் மதிப்புச் சங்கிலி முழுவதும் தனியார் நிறுவனங்களின் அதிகரித்து வரும் பங்களிப்பு குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார்.
இந்தியாவின் தனியார் விண்வெளிச் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்துள்ளது. 2019-ல் ஒற்றை இலக்கத்தில் இருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 400-ஐத் தாண்டும். இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் தற்போது ஏவுகணைகள், செயற்கைக்கோள் மற்றும் பேலோட் உற்பத்தி, தரைவழி உள்கட்டமைப்பு, தரவுச் சேவைகள் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுப்பாதை சார்ந்த பிரிவுகள் எனப் பல்வேறு துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் உலகளாவிய ஆர்வம், புகழ்பெற்ற விண்வெளிப் பயண நாடுகள் உட்பட சர்வதேச வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடுகளிலும் பிரதிபலிக்கிறது.
இந்த வேகத்தை ஆதரிப்பதற்காக, பல்வேறு பிரத்யேக முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி நிலையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, SIDBI உடன் இணைந்து ₹1,000 கோடி மதிப்பிலான துணிகர மூலதன நிதி ஒன்று செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது. அதே சமயம், ₹500 கோடி மதிப்பிலான தொழில்நுட்பத் தத்தெடுப்பு நிதியானது, ஆரம்பகட்டப் புத்தாக்கங்களை வணிகரீதியாகச் சாத்தியமான தயாரிப்புகளாக மாற்றுவதற்கு உதவுகிறது. தொடக்க நிதித் திட்டமானது, கருத்தாக்கம் மற்றும் முன்மாதிரி நிலையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ₹1 கோடி வரையிலான மானியங்களை, வழிகாட்டுதல் மற்றும் சூழல் அமைப்பு ஆதரவுடன் வழங்குகிறது.
திறமையான பணியாளர்களை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. செயற்கைக்கோள் உற்பத்தி, ஏவுகணை அமைப்புகள் மற்றும் விண்வெளி இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் 17 சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் நிறைவடைந்து, ஏறத்தாழ 900 பங்கேற்பாளர்கள் சான்றிதழ் பெற்றுள்ளனர். பல்கலைக்கழகங்களில் அமையவிருக்கும் விண்வெளி ஆய்வகங்கள், செய்முறை மற்றும் நேரடிக் கற்றல் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இந்தத் திறமையாளர் வரிசையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்புத் துறையில், பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் தனியாரால் வழிநடத்தப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் கூட்டமைப்பு, புத்தொழில் நிறுவனங்களுக்கான பகிரப்பட்ட செயற்கைக்கோள் பஸ் தளத்தின் உருவாக்கம், மற்றும் அகமதாபாத்தில் உள்ள IN-SPACe தொழில்நுட்ப மையத்தில் வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு, மற்றும் சோதனை வசதிகளுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல் போன்ற முன்னெடுப்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனம் (SSLV) உள்ளிட்ட தொழில்நுட்பப் பரிமாற்றத் திட்டங்களும், தொழில்துறைப் பங்கேற்புடன் முன்னேறி வருகின்றன.
விண்வெளித் துறையில் இந்தியாவின் உலகளாவிய ஈடுபாடு தொடர்ந்து ஆழமடைந்து வருகிறது, தற்போது 45-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் கூட்டாண்மைகள் விரிவடைந்துள்ளன. சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான ஒப்பந்தங்கள், சர்வதேச விண்வெளி மன்றங்களில் இந்திய நிறுவனங்களின் பங்கேற்பு, மற்றும் உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்களை உலகளாவிய சந்தைகளுடன் இணைப்பதற்கான முயற்சிகள் ஆகியவை சமீபத்திய ஒத்துழைப்புகளில் அடங்கும்.
தொடங்கப்பட்டதிலிருந்து, IN-SPACe புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையிடமிருந்து 1,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று, 129 அங்கீகாரங்களை வழங்கியுள்ளது. இது இந்தியாவின் சீர்திருத்தப்பட்ட விண்வெளிச் சூழலமைப்பின் மீதான வளர்ந்து வரும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
திவாஹர்
