மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இன்று மும்பையில் நடைபெற்ற இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) 38வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் திருமதி சீதாராமன், செபியின் நாடு தழுவிய முதலீட்டாளர் விழிப்புணர்வு முன்னெடுப்பான ‘மிஷன் ஜாக்ரூக்’-ஐயும் டிஜிட்டல் முறையில் தொடங்கி வைத்தார்.
தனது சிறப்புரையில், மத்திய நிதியமைச்சர், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள செபி தயாராக இருக்க வேண்டும் என்றும், அவற்றில் மிகவும் அவசரமானது இணையப் பாதுகாப்பு சவால்கள் என்றும் வலியுறுத்தினார். ஒரு பெரிய பங்குச் சந்தை, வைப்புத்தொகை நிறுவனம், தீர்வு நிறுவனம் அல்லது பெரிய தரகர் மீது நடத்தப்படும் ஒரு வெற்றிகரமான இணையத் தாக்குதல், தேசிய அளவில் சந்தைகளை சீர்குலைத்து, செல்வத்தை அழித்து, பொதுமக்களின் நம்பிக்கையை அசைத்துவிடும் என்றும், அதை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகள் ஆகும் என்றும் திருமதி. சீதாராமன் கூறினார். மேலும் அவர், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கருவிகள் இணையத் தாக்குதல்களை வேகமானதாகவும், மேலும் தகவமைத்துக் கொள்ளக்கூடியதாகவும், விரிவாக்கக்கூடியதாகவும், சில சமயங்களில் செயல்படுத்துவதில் அதிக தன்னாட்சி கொண்டதாகவும் ஆக்குகின்றன என்று கூறினார். இந்த அபாயங்கள் பல வடிவங்களில் வரலாம் — கணினி அமைப்பின் குறைபாடுகளைத் தானாகக் கண்டறிதல், தீங்கிழைக்கும் மூலக் குறியீட்டுத் தலையீடு, மென்பொருள் விநியோகச் சங்கிலிகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் மற்றும் கண்டறிதலில் இருந்து தப்பிக்க நிகழ்நேரத்தில் உருவாகக்கூடிய ஒருங்கிணைந்த ஊடுருவல்கள் போன்றவை. “எனவே, செபி மட்டுமல்ல, அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களும் விதிவிலக்காக விழிப்புடன் இருக்க வேண்டும். தாக்குதல் கருவிகள் அதிவேகமாக உருவாகி வருகின்றன, மேலும் பாதுகாப்பு கருவிகள் அதைவிட வேகமாக உருவாக வேண்டும்,” என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்களில் போலி முதலீட்டு வீடியோக்களும் செயலிகளும் பெருமளவில் பரவி வருகின்றன, அவற்றில் பல தலைவர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்ய டீப்ஃபேக் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன என்று மத்திய நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், நிதியமைச்சர் திருமதி. சீதாராமன், ஏப்ரல் 2025-ல் நடைமுறைக்கு வந்த இணையப் பாதுகாப்பு மற்றும் இணைய மீள்திறன் கட்டமைப்பு மூலம் செபி பாராட்டுக்குரிய நல்ல பணியைச் செய்துள்ளது என்றார். இது மேலும் பல பணிகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு உறுதியான அடித்தளம் என்றும் அவர் மேலும் கூறினார்.
பல ஆண்டுகளாக செபியின் தொடர்ச்சியான சீர்திருத்தப் பயணம் குறித்துப் பேசிய அதன் தலைவர் திரு. துஹின் காந்தா பாண்டே, திரை அடிப்படையிலான வர்த்தகத்திற்கு மாறுதல், மின்னணுப் பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்துதல், தொடர் தீர்வு முறைக்கு மாறுதல், பெருநிறுவன ஆளுகையை வலுப்படுத்துதல் மற்றும் வலுவான இடர் மேலாண்மை அமைப்புகளை உருவாக்குதல் போன்ற தொடர்ச்சியான அடிப்படை சீர்திருத்தங்களை செபி முன்னெடுத்துள்ளது என்றார். தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 5,900-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், 14 கோடிக்கும் அதிகமான தனிப்பட்ட முதலீட்டாளர்களும் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில், சந்தை மூலதனம் சுமார் 15 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்துள்ளது. பரஸ்பர நிதி சொத்துக்கள் ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கும் மேலாக விரிவடைந்துள்ளன. பெருநிறுவனப் பத்திரச் சந்தை அதன் சீரான வளர்ச்சியைத் தொடர்கிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும், முதன்மைச் சந்தை கிட்டத்தட்ட ₹10 டிரில்லியன் மூலதன உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக, அதாவது விதிமுறைகளை எளிமையாக்கி மேம்படுத்துதல், தெளிவற்ற தன்மைகளை நீக்குதல், சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் மூலதன உருவாக்கத்தை எளிதாக்குதல் போன்ற பரந்த அளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டுவர, கடந்த ஓராண்டில் செபி அனைத்து பங்குதாரர்களுடனும் ஆழமாக ஈடுபட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
திவாஹர்
