தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களது விளம்பரங்களுக்கு, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பித்துச் சான்றிதழ் பெற வேண்டும்.

தேர்தல் ஆணையம், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று அறிவித்துள்ளது.

தொலைக்காட்சி, வானொலி, பொது இடங்களில் ஒலி-ஒளிக் காட்சிகள், மின்-பத்திரிகைகள், மொத்தமாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகள்/குரல் செய்திகள் உள்ளிட்டவற்றுக்கும், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன் அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறை பதிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சி, அமைப்பு, போட்டியிடும் வேட்பாளர் ஆகியோருக்குப் பொருந்தும். இவர்கள் விளம்பரங்களை வெளியிட ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (எம்சிஎம்சி – MCMC) முன் அனுமதிச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

வேட்பாளர்கள் மாவட்ட ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விளம்பரங்களுக்கான சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் தலைமையிடத்தில் செயல்படும் அனைத்துப் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், மாநில அளவிலான ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அத்தகைய விளம்பரங்களுக்கான சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் மாவட்ட/மாநில ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். இதை விசாரிப்பதற்காக, தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையிலான ஒரு மேல்முறையீட்டுக் குழுவும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள்/வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் இருந்து முன் அனுமதிச் சான்றிதழ் பெறாமல், சமூக ஊடக வலைத்தளங்கள் உட்பட எந்தவொரு இணைய அடிப்படையிலான ஊடகங்கள்/வலைத்தளங்களிலும் அரசியல் விளம்பரங்களை வெளியிடக் கூடாது.

ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள், ஊடகங்களில் பணம் பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிடப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் வழக்குகளைக் கடுமையாகக் கண்காணித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.

மேலும், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில், தங்களது பிரமாணப் பத்திரத்தில் உண்மையான சமூக ஊடகக் கணக்குகளின் விவரங்களைப் பகிர வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 77(1) மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, அரசியல் கட்சிகள் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்த 75 நாட்களுக்குள் சமூக ஊடகத் தளங்கள் உட்பட இணையம் மூலம் பிரச்சாரத்திற்கு செலவழித்த தொகை குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தகைய செலவினங்களில், விளம்பரங்களை வெளியிடுவதற்காக இணைய நிறுவனங்களுக்கும் வலைத்தளங்களுக்கும் செய்யப்படும் பரிவர்த்தனைகள், உள்ளடக்கம் பிரச்சாரம் தொடர்பான செலவினங்கள், சமூக ஊடகக் கணக்குகளைப் பராமரிப்பதற்காக ஏற்படும் செயல்பாட்டுச் செலவினங்கள் ஆகியவை அடங்கும்.

இது தொடர்பான விதிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், தேர்தல்களின் போது தவறான தகவல், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், அவற்றின் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்யும் வகையில், தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகள், மாநில தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அதிகாரிகள், சமூக ஊடகத் தளங்களின் (SMPs) பிரதிநிதிகள் ஆகியோருடன் நேற்று (மார்ச் 19, 2026) ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

Leave a Reply