நிலக்கரி அமைச்சக ஆலோசனைக் குழுக் கூட்டம் இத்துறையின் அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட நிலக்கரி அமைச்சக ஆலோசனைக் குழுக் கூட்டம் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, குழுவின் உறுப்பினர்கள், நிலக்கரி அமைச்சகம் மற்றும் நிலக்கரி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிலக்கரி நிறுவனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு என்பது இந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் விவாதப் பொருளாக இருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்தப் பொருளில் விரிவான அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.  அதில் முக்கிய கொள்கை முன்முயற்சிகள், முன்னேற்றம், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன.

கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, கோல் இந்தியா நிறுவனம் வெறுமனே நிலக்கரி சுரங்கத்திற்காக மட்டும் அல்ல என்றும், ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுக்கும் குறிப்பாக, நிலக்கரியை எரிவாயுவாக மாற்றும் பணிகளிலும் ஈடுபடுவதாக கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, தற்போதைய சூழலில் தொழில்நுட்ப மேம்பாடு என்பது வெறும் வாய்ப்பு மட்டுமல்ல என்றும், நிரந்தர நோக்கத்திற்கான மாற்றத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார். உற்பத்தி, பாதுகாப்பு, திறன், சுற்றுச்சூழல் பொறுப்பு உள்ளிட்ட நிலக்கரி துறையின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்த தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். உதாரணமாக, நில அளவையில் ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாடு, முப்பரிமாண லேசர் ஸ்கேனிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் அடிப்படையிலான உத்தேச பகுப்பாய்வு ஆகியவற்றை எடுத்துரைத்த திரு ரெட்டி, நிலக்கரித்துறை வழக்கமான சுரங்கப் பணியிலிருந்து நவீனமான, பாதுகாப்பான, டிஜிட்டல் முறையிலான சுரங்கப் பணிகளை நோக்கி முன்னேறி வருவதாக கூறினார்.

நிலக்கரி அமைச்சகத்தின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரி நிறுவனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ஆலோசனைகளும் தெரிவித்தனர்.

Leave a Reply