கரூர் வழக்கு விசாரணை! அரசியல் காரணங்களுக்காக தவெக தலைவர் விஜயை சிபிஐ பழி வாங்க துடிக்கிறது என்ற குற்றச்சாட்டில் கடுகளவும் உண்மையில்லை.

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்க்கு, சிபிஐ அனுப்பி இருந்த அழைப்பாணைக் குறித்து கடந்த 15 நாட்களாக தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தவெக கட்சியின் தலைவர் விஜயின் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளும், வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வரும் கூலிப்படையினரும், கரூர் சம்பவம் தொடர்பாக “சிபிஐ -யின் பிடியில் வசமாக சிக்கிக்கொண்ட விஜய்” என்று அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒலி, ஒளிப்பதிவினை அரங்கேற்றி இயக்கி, இயங்கி வந்தனர்.

சிபிஐ அனுப்பிய அழைப்பாணைக்கு பொய்யானக் காரணங்களைச் சொல்லி வாய்தா வாங்காமல், நேர்மையான முறையில் இரண்டாவது முறையாக இன்று (19.01.2026 திங்கள்கிழமை) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராகி திரும்பி இருக்கிறார்.

இந்த வழக்கு விசாரணையின் தாமதத்திற்கு எந்த வகையிலும் தன்னுடைய நடவடிக்கைக் காரணமாக இருந்து விடக்கூடாது என்பதில் விஜய் மிக கவனமாக இருக்கிறார். மேலும், கரூர் சம்பவத்தில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் உயிர் இழக்க காரணமாக இருந்தவர்கள் யார்? எதனால் அந்த துயரச் சம்பவம் நடந்தது? என்ற உண்மை சட்ட ரீதியாக விரைவில் நாட்டு மக்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியாக நீதி கிடைக்க வேண்டும், குற்றத்திற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தவெக தலைவர் விஜய் மிக உறுதியாக இருக்கிறார்.

அதனால்தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி நேரடிக் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக வேறு சில மனுதாரர்கள் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நேரடிப் பார்வையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் தான் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

அந்த வகையில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் பிரதிநிதியாக இன்று இரண்டாவது முறையாக சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகி உண்மையைப் பதிவு செய்திருக்கிறார்.

கரூர் துயரச் சம்பவத்தில் தவெக தலைவர் விஜயோ அல்லது அவரது கட்சிக்காரர்களோ தெரிந்தோ, தெரியாமலோ உண்மையிலுமே தவறு இழைத்திருந்தாலோ அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ தாங்களாகவே முன்வந்து உச்ச நீதிமன்றத்தின் பிடியில் போய் சிக்கிக் கொள்வார்களா? அவதூறுப் பரப்பும் நபர்களுக்கு இந்த அடிப்படை புரிதல் கூட இல்லை என்பதை நினைக்கும்போது உண்மையிலுமே வியப்பாக இருக்கிறது. விஜயின் அரசியல் வருகையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் அக்கினி வார்த்தைகளால் அவரை அபிஷேகம் செய்து வருகிறார்கள்.

எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தமது கட்சித் தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள்; அதற்கு உடந்தையாகவும் இருக்க மாட்டார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே வீடியோ வெளியிட்டு உண்மையை விளக்கிய பிறகும், கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிர் இழப்புக்கு தவெக தலைவர் விஜய் தான் காரணம் என்று தீர்ப்பிடுவது எந்த வகையில் நியாயம்? அப்படி அவதூறுப் பரப்பும் நபர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இந்த வழக்கை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு பிரிவு (CBI) அதிகாரிகள் இந்த வழக்கு சம்பந்தமாக எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வீடியோப் பதிவு மூலமாகவோ அவதூறு பரப்பி வரும் நபர்கள் அனைவரையும் அழைப்பானைக் கொடுத்து விசாரிக்க வேண்டும். உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்காத நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரி CBI அழைப்பாணை என்றால் என்ன என்றுப் பார்ப்போம்.

சிபிஐ ஒரு அழைப்பை அனுப்பினால், அது அதிகாரப்பூர்வ கடிதம் அல்லது சட்டப்பூர்வ நடைமுறைகள் மூலம் வரும்; அது வாட்ஸ்அப் அல்லது வீடியோ அழைப்பாக இருக்காது.

சிபிஐ அழைப்பாணை என்பது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (CrPC) ஒரு நபர் விசாரணைக்காக நீதிமன்றத்தால் அல்லது சிபிஐயால் அழைக்கப்படுவதற்கான முறையான அறிவிப்பாகும், இது பொதுவாக போலீஸ் அல்லது நீதிமன்ற அதிகாரியால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டு, கையொப்பத்துடன் பெறப்படும், மேலும் சிபிஐ விசாரிக்கும்போது, அது மாநில அரசின் முன் அனுமதி அல்லது உச்ச நீதிமன்றம்/உயர் நீதிமன்ற உத்தரவு தேவைப்படும்.

மாநில காவல்துறை மீது அவநம்பிக்கை அல்லது விசாரணையில் குறைபாடு இருக்கும்போது, நீதிமன்றங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் அனுமதி இல்லாமல், சிபிஐ தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க முடியாது என்ற சூழ்நிலை இருப்பதால்தான், கரூர் வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரம் மற்றும் இடத்திற்கு குறிப்பிட்ட ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.சிபிஐ அதிகாரிகள் விசாரணை குறித்த கேள்விகள் கேட்டால், உண்மையாகவும், சட்டப்படி பதிலளிக்க வேண்டும்.

சுருக்கமாக, சிபிஐ அழைப்பாணை என்பது சட்டத்தின்படியான ஒரு செயல்முறை. அதன் சேவை மற்றும் நடைமுறைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கவனமாக பின்பற்றப்படுகின்றன, மேலும் அழைக்கப்பட்ட நபர் அதற்குரிய சட்டப்படி பதிலளிக்க வேண்டும்.

குற்றவாளிகளை மட்டும் தான் சிபிஐ விசாரிக்கும் என்ற கருத்து தவறானது. பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லாதப் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும், நண்பர்களையும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நபர்களையும், மேலும், அந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட சாட்சிகளையும் சிபிஐ அதிகாரிகள் நிச்சயம் விசாரிப்பார்கள். அந்த வகையில் தான் தவெக தலைவர் விஜய்யும் இரண்டு முறை விசாரிக்கப்பட்டு இருக்கிறார். இது சிபிஐயின் வழக்கமான நடைமுறைதான்.

சிபிஐ வழக்கு விசாரணை என்பது பலத்தப் பாதுகாப்புடன் மிகவும் இரகசியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபிஐ விசாரணை அதிகாரிகளோ அல்லது விசாரணையில் பங்கேற்ற நபரோ அங்கு என்ன நடந்தது? என்ற தகவலை வெளியில் சொன்னால் மட்டுமே விசாரணையின் விபரங்கள் பொதுவெளிக்கு தெரியவரும். உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் அவர்கள் கற்பனைக்கு ஏற்றவாறு வதந்திகளைச் செய்திகளாக்கி வருமானம் ஈட்டும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நடக்கும் சிபிஐ விசாரணைக்கு, சென்னையில் வீட்டில் உட்கார்ந்து இருக்கும் நபர்களை தேடி பிடித்து ஊடகங்கள் கருத்து கேட்கும் அவலம் தமிழ்நாட்டில் தான் நடந்து வருகிறது. இது மல்லாந்துப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம். இவற்றையெல்லாம் மக்கள் விரும்பவும் இல்லை, ரசிக்கவும் இல்லை என்பதை இவர்கள் என்று தான் உணரப்போகிறார்களோ?!

இந்த கரூர் வழக்கு விசாரணையை பொறுத்தவரை அரசியல் காரணங்களுக்காக தவெக தலைவர் விஜயை சிபிஐ பழி வாங்க துடிக்கிறது என்ற குற்றச்சாட்டில் கடுகளவும் உண்மையில்லை. சிபிஐ தனது கடமையை வழக்கம் போலவே செய்து வருகிறது. அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கும், சிபாரிசுகளுக்கும் சிபிஐ ஒருபோதும் அடிபணியாது. எனவே, தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி வழக்கை திசை திருப்பிவிடலாம் என்று நினைத்தால் அது சிபிஐயிடம் நடக்காது. ஆதாரமில்லாமல் யாரையும் சிபிஐ கைது செய்யாது.

உரிய ஆதாரங்களும், ஆவணங்களும், சாட்சியங்களும் கிடைக்கும் வரை சிபிஐ விசாரணை நீண்டுக் கொண்டே தான் இருக்கும். குற்றப் பத்திரிக்கை முழுமை அடைந்து நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பிக்கும் வரை இதுப் போன்ற வதந்திகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

அரசியல் காரணங்களுக்காகவோ, பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காகவோ சிபிஐ தனது பாணியை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது. தடயங்கள் கிடைக்கவில்லை என்றால் அது கிடைக்கும் வரை தனது புலன் விசாரணையை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். குற்றவாளிகள் சிக்கவில்லை என்பதற்காக, வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக போலியான கைது நடவடிக்கைகளை சிபிஐ ஒரு போதும் செய்யாது.

அப்படி நினைத்திருந்தால் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு என்றைக்கோ முடிவுக்கு வந்திருக்கும்.

ஆதாரமில்லாமல் யாரையும் தொடாது; ஆதாரம் இருந்தால் யாரையும் விடாது! இதுதான் சிபிஐயின் உண்மையான செயல்பாடு. இந்த அடிப்படை உண்மை தெரியாமல் யாரும் புலம்ப வேண்டாம்.

Leave a Reply