பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பை (வகைப்பாடு-VII) தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அண்மையில் கடமைப் பாதையில் பொது மத்திய செயலகத்திற்காக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை திறந்து வைத்ததை சுட்டிக்காட்டினார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். ­­­­இந்தியாவில் உள்ள நான்கு சிறந்த நதிகளின் பெயரில் அதாவது, கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹுக்ளி என்ற பெயர்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் நதிகளை நினைவு கூரும் வகையில், இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இது மக்கள் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒற்றுமையின் பிணைப்பை எடுத்துக்காட்டும் வகையில், நதிகளின் பெயர்களை வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். தில்லியில் வசித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த புதிய குடியிருப்பு வளாகம், உறுப்பினர்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசின் குடியிருப்பு வசதிகள் தற்போது அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர், இந்த குடியிருப்பு வளாக கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள மாதிரி வீட்டிற்குச் சென்று பார்வையிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக பிரதமர் கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகள் நிலை குறித்தும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்தார். இந்த பழைய குடியிருப்புகள் பாழடைந்தும், பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததையும் பிரதமர் குறிப்பிட்டார். இதன் காரணமாக பழைய குடியிருப்புகளில் வசித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் மோசமான நிலை காரமாணக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புதிய குடியிருப்புகளுக்குச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழைய குடியிருப்புகளில் எதிர்கொண்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகள் குறித்த பிரச்சனைகளில் இருந்து விடுபடும் போது, குடிமக்களின் பிரச்சனைகளுக்கு திறம்பட தீர்வு காண்பதற்கான சக்தி மற்றும் கூடுதல் நேரத்தை செலவிட வாய்ப்பு ஏற்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதுதில்லியில் வீடு கிடைப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகம், இத்தகைய இன்னல்களை களைய உதவிடும் என்று கூறினார். 180-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் இந்த பல்லடுக்கு குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வீடுகளை கட்டுவதற்கான முன்முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார பரிமாணத்தை இத்திட்டம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கடமை மாளிகையை தொடங்கி வைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், பல்வேறு அமைச்சகங்கள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வந்ததாகவும், அதற்காக ஆண்டுதோறும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வாடகையாக செலவிடப்பட்டது, மக்களின் நிதி நேரடியாக வீணடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.   இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய வீட்டு வசதி இல்லாத சூழல் அரசின் செலவினங்களை அதிகரிக்கச் செய்ததாக பிரதமர் கூறினார். கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மக்களவை உறுப்பினர்களுக்காக ஒரு புதிய வீடு கூட கட்டப்படவில்லை என்றும், இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். எனவே, தனது தலைமையிலான மத்திய அரசு இந்தப் பணியை ஒரு இயக்கமாக கருதி செயல்பட்டதாகவும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஏறத்தாழ 350 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

21-ம் நூற்றாண்டில் இந்தியா வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர், இதன் ஒரு பகுதியாக நாட்டிற்காக கடமைப் பாதை மற்றும் கடமை மாளிகை கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், அதே சமயத்தில் லட்ச்சக்கணக்கான மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் கடமையும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டம் நிறைவடைந்துள்ளதாகவும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நான்கு கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாட்டிற்காக புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார். அரசின் இத்தகைய முன்முயற்சிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பயன்கள் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைந்து வருவதாக பிரதமர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களும் இதில் அடங்கி உள்ளதாக கூறினார். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இத்தகைய முன்முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். வீட்டு வசதி வளாகங்களில் சூரிய மின் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். நீடித்த வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், சூரியசக்தி உற்பத்தியில் படைக்கப்பட்டுள்ள புதிய சாதனைகள் இதனை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply