நாடு முழுவதும் 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன : மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி.

நாடு முழுவதும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கும் நோக்கில் 2016 மே மாதத்தில் பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. 2019 செப்டம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தின் கீழ், 8 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எஞ்சிய மற்ற வீடுகளுக்கும் இணைப்பை அளிக்கும் வகையில் மேலும் 1 கோடி சிலிண்டர் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2021 ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் கட்ட உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான இலக்கு 2022 ஜனவரி மாதத்தில் எட்டப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேலும் 60 லட்சம் இணைப்புகளை வழங்க அரசு முடிவு செய்தது. 2022 டிசம்பர் மாதத்தில் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டத்தின் 1.60 கோடி இணைப்புகள் என்ற இலக்கும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இத்திட்டத்தின் கீழ், கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இது 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டது. 1.07.2025 நிலவரப்படி பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது அளித்த பதிலில் கூறினார்.      

Leave a Reply