வரும் தேர்தலில் நிரந்தரமாக குட்பை சொல்வார்கள், தேர்தல் களத்தில் எடப்பாடியை நம்ப அதிமுகவினரே தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறையில் பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார். இன்று காலை வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். தொடர்ந்து, ரூ.48.17 கோடியில் 47 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.113.51 கோடியில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 54,520 பயனாளிகளுக்கு ரூ. 271.24 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது: திராவிட மாடல் அரசின் இலக்கு எல்லோருக்கும் எல்லாம்.
அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி. அதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்து பார்த்து, மக்களின் கருத்துக்களை கேட்டு கேட்டு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு பிரச்னையை தீர்க்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமரை சந்திக்கும்போதெல்லாம் வலியுறுத்துகிறேன். தமிழர்கள் மீதோ, தமிழக மீனவர்கள் மீதோ கொஞ்சமும் அக்கறை இல்லாத ஒன்றிய அரசு, கச்சத் தீவை தாரை வார்த்தது யார் என அவர்கள் அரசியல் மட்டும் தான் செய்கின்றனர். இன்னொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பாஜ ஆட்சி செய்கிறது. சமீபத்தில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர், கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். கச்சத்தீவை ஒரு போதும் விட்டுத்தர மாட்டோம் என கூறியுள்ளார்.
எஸ்.திவ்யா
