போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் 10-வது உயர்மட்டக் கூட்டம் ஜூன் 26 அன்று புதுதில்லியில் நடைபெறுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஜூன் 26, வெள்ளிக்கிழமை அன்று போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (என்சிஓஆர்டி) 10-வது உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டம், போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்த முக்கியப் பங்காற்றும். இதில் மத்திய அரசின் 44 அமைச்சகங்கள், துறைகளின் முக்கியப் பிரதிநிதிகள், மாநில அரசுகள் சார்பில் 108 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு அமித் ஷா “போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த தொலைநோக்கு ஆவணம் (2026-2029)”, “போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் ஆண்டு அறிக்கை-2025” ஆகியவற்றை வெளியிடுகிறார். இந்தத் தொலைநோக்கு ஆவணம், போதைப்பொருள் தொடர்பான சவால்களை ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்ள கொள்கை உருவாக்கத்திற்கும் நிறுவன வலுவூட்டலுக்கும் வழிகாட்டும் கட்டமைப்பாகச் செயல்படும்.

மேலும், ஜம்மு, குவஹாத்தி ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள என்சிபி மண்டல அலுவலகங்களை அவர் திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,09,500 கிலோ போதைப்பொருட்களை அழிப்பதற்கான சிறப்பு இயக்கத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். இக்கூட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான மத்திய அரசின் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை’ உறுதிப்படுத்தும் விதமாக அமையும்.

Leave a Reply