அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறைக்கான மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளி, பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை ஆகியவற்றின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வெளி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், இந்தியாவின் விண்வெளித் துறையில் முதலீடுகளையும் பங்களிப்பையும் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறைத் தலைவர்களை இன்று கேட்டுக்கொண்டார்.
10வது இன்-ஸ்பேஸ் இண்டஸ்ட்ரி கனெக்ட் நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழலமைப்பு குறிப்பிடத்தக்க புத்தாக்கத்தையும் தொழில்நுட்பத் திறனையும் வெளிப்படுத்தியிருந்தாலும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் தலைமைத்துவத்தை அடைவதற்கு, ஏற்கனவே நிலைபெற்ற தொழில்துறைகள் மேம்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு, உற்பத்தி வலிமை மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றின் மூலம் வலுவான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் விண்வெளித் துறையைத் தனியார் பங்கேற்புக்குத் திறந்துவிட்டமை, மூலோபாயத் துறைகள் மீதான இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு வரலாற்று மாற்றத்தைக் குறிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். இந்தச் சீர்திருத்தங்கள், இந்தியாவின் மறைந்திருந்த தொழில்முனைவு ஆற்றலை வெளிக்கொணர்ந்து, குறுகிய காலத்திற்குள் நாட்டின் விண்வெளிச் சூழலமைப்பை மாற்றியமைத்த ஒரு துணிச்சலான முடிவு என அவர் விவரித்தார்.
இத்துறைக்கு ஆதரவளிக்க மேற்கொள்ளப்பட்ட கொள்கை முன்னெடுப்புகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளித் துறை சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இந்திய விண்வெளிக் கொள்கை 2023 கொண்டுவரப்பட்டதாகவும், அது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்திசார் வழிகாட்டுதலையும் ஒழுங்குமுறைத் தெளிவையும் வழங்கியதாகவும் கூறினார். மேலும், அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிமுறைகளின் தாராளமயமாக்கல், முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இந்தியாவின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) நிறுவப்பட்டதை, முழு விண்வெளி மதிப்புச் சங்கிலி முழுவதும் அரசு சாரா நிறுவனங்களின் பங்கேற்பை இயக்கி, ஊக்குவித்து, அங்கீகரித்து, மேற்பார்வையிட்ட ஒரு முக்கிய நிறுவன சீர்திருத்தம் என அமைச்சர் விவரித்தார்.
நிதி மற்றும் நிறுவன ஆதரவு வழிமுறைகள் மூலம் புத்தாக்கச் சூழலமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். இத்துறையில் புத்தாக்கம் மற்றும் வணிகமயமாக்கலை எளிதாக்குவதற்காக ₹1,000 கோடி துணிகர மூலதன நிதியும், ₹500 கோடி தொழில்நுட்பத் தத்தெடுப்பு நிதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடக்க நிதி, அடைகாப்பு ஆதரவு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளித் தொழில்நுட்பப் பாடத்திட்டம் தொடர்பான முன்னெடுப்புகள், நாட்டின் விரிவடைந்து வரும் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எதிர்காலத்திற்குத் தயாரான திறமையாளர் வரிசையை உருவாக்குவதற்குப் பங்களித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் தனியார் விண்வெளிச் சூழலமைப்பின் விரைவான வளர்ச்சியைக் குறிப்பிட்ட அமைச்சர், ஒரு சில முன்னோடி நிறுவனங்களுடன் தொடங்கிய இது, தற்போது 400-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பல நூறு பெரிய, சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு சூழலமைப்பாக வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்திய நிறுவனங்கள் இன்று ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், உந்துவிசை அமைப்புகள், புவி கண்காணிப்பு செயலிகள், விண்வெளிச் சூழல் விழிப்புணர்வுத் திறன்கள் மற்றும் பலதரப்பட்ட கீழ்நிலைத் தீர்வுகளை உருவாக்கி வருகின்றன என்று அவர் கூறினார். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்சல், கேலக்ஸி, திகந்தரா மற்றும் துருவா ஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள், இந்தியாவின் தொழில்முனைவுத் திறன்களுக்கும் தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் ஆராய்ச்சியில் வலுவான கொடைப் பண்பாடு உருவாக வேண்டும் என அழைப்பு விடுத்த டாக்டர் ஜிதேந்திர சிங், கொடைப் பங்களிப்புகள் பாரம்பரியமாகத் தொண்டு நோக்கங்களுக்காகச் செலுத்தப்பட்டு வந்தாலும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் செய்யப்படும் முதலீடும் சமூகத்திற்கான ஒரு முக்கிய சேவையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் விண்வெளிச் சூழலில் இயங்கும்போது தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு, தொழில்துறை சார்ந்தவர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்த அவர், கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே ஒரு திறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
வேகமான ஒப்புதல்கள், நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் ஒரு செயல்திறன்மிக்க ஒற்றைச் சாளர அமைப்பு ஆகியவற்றின் தேவை குறித்த தொழில்துறையின் கவலைகளை டாக்டர் ஜிதேந்திர சிங் ஏற்றுக்கொண்டார். நிர்வாகத்தின் நோக்கம், எதிர்பாராத தடைகளை உருவாக்குவதை விட, புத்தாக்கத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆத்மநிர்பர் அந்தரிக்ஷ் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு, அரசு, தொழில்துறை, கல்வித்துறை, முதலீட்டாளர்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு தேவை என்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். புத்தொழில் நிறுவனங்களின் சுறுசுறுப்புக்கு, நிலைபெற்ற தொழில்துறைகளின் அளவு, நிதி வலிமை மற்றும் செயல்படுத்தும் திறன்கள் துணைபுரிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் அபரிமிதமான திறமையும் தொழில்முனைவு ஆற்றலும் உள்ளன என்றும், அதற்கு உகந்த கொள்கைச் சூழல் ஒன்றே நீண்ட காலமாக இல்லாமல் இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்ட சீர்திருத்தங்கள், அந்தச் சூழலை உருவாக்கி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்குப் புதிய வழிகளைத் திறந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
தனது உரையை நிறைவு செய்த டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளித் துறையில் இந்தியாவின் லட்சியங்களை அரசின் முயற்சிகளால் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று மீண்டும் வலியுறுத்தினார். உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு முன்னணி சக்தியாக நிலைநிறுத்துவதற்கு, அனைத்துத் தரப்பினரும் லட்சியம், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
திவாஹர்
