பிரிஸ்டல் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்க மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் கடிதங்களை வழங்கியுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் முன்னிலையில், உயர்கல்வித் துறை செயலாளரும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவருமான டாக்டர் வினீத் ஜோஷி இந்த ஒப்புதல் கடிதங்களை வழங்கினார்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தலைவரும் இயக்குநருமான திருமதி மிஷெல் ஜோன்ஸ், யார்க் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சார்லி ஜெஃப்ரி, நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் சாரா மேடிசன் ஆகியோர் இந்த அனுமதிக் கடிதங்களை நேரில் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு தர்மேந்திர பிரதான், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவில் வளாகங்களை அமைப்பது, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, கல்வியை சர்வதேசமயமாக்கும் தொலைநோக்குப் பார்வையில் முக்கிய அம்சம் என்று கூறினார்.
இந்த நிறுவனங்கள் இந்தியாவில் தரமான கல்வி, உலகளாவிய கற்றல், ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். பிரிஸ்டல், யார்க் பல்கலைக்கழகங்கள் மும்பையிலும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் பெங்களூருவிலும் தங்கள் வளாகங்களை நிறுவுவதன் மூலம், இந்தப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் மிகவும் ஆற்றல்மிக்க அறிவு, தொழில்நுட்பம், புத்தாக்க மையங்களுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
திவாஹர்
