மஹபூப்நகர்-செகந்திராபாத்-மேட்சல் வழித்தடத்தில் மின்சார இழுவை அமைப்பை மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தென் மத்திய ரயில்வேயின் மஹபூப்நகர்-செகந்திராபாத்-மேட்சல் வழித்தடத்தில், ரயில் சேவைகளை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டத்திற்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தற்போதைய 1×25 கேவி மின்சார இழுவை அமைப்பு, நவீன 2×25 கேவி மின்சார அமைப்பாக மேம்படுத்தப்படும். 141 வழித்தட கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பிரிவில், ரூ 285.01 கோடி செலவில், இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாடு முழுவதும் உள்ள பரபரப்பான ரயில் வழித்தடங்களில், அதன்  திறனை அதிகரிக்கும் நோக்கில், இந்திய ரயில்வே மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இத்திட்டம் அமைந்துள்ளது. 2×25 கேவி அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், ரயில் சேவைகளுக்கு, மிகவும் நிலையான, செயல்திறன்மிக்க மின்சார வசதி  வழங்கப்படும். இது ரயில் சேவைகளை மென்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதற்கு உதவிடும்.

மஹபூப்நகர்-செகந்திராபாத்-மேட்சல் வழித்தடம், நாட்டின் முக்கியமான அதிக ரயில் சேவைகளைக் கொண்ட, ரயில்வே கட்டமைப்புக்கான வழித்தடங்களில் ஒன்றாகும். இது தர்மாவரம்-டோன்-மஹபூப்நகர் – செகந்திராபாத் – மேட்சல் -முட்கேட் -இந்தூர்-அஜ்மீர் ரயில் வழித்தடப் பிரிவில் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் கணிசமான எண்ணிக்கையிலான பயணிகள், சரக்கு போக்குவரத்தைக் கையாள்கிறது.

இத்திட்டம் நிறைவடையும் போது, இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் மேலும் மேம்படும். சரக்கு போக்குவரத்து செயல்திறன் மிக்கதாக மாற்றுவதுடன், அதன் வேகம், திறன் ஆகிய இரண்டு அம்சங்களும் மேம்படும். இப்பகுதி முழுவதும் வர்த்தகம், தொழில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply