அபேடா உதவியுடன் ஜார்க்கண்டிலிருந்து இங்கிலாந்துக்கு முதல் முறையாக மாம்பழங்கள் ஏற்றுமதி.

ஜார்க்கண்டின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் – பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA), இந்த மாநிலத்திலிருந்து இங்கிலாந்துக்கு மாம்பழங்களின் முதல் வணிக ஏற்றுமதியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தது. இதற்கான விழா 2026 ஜூன் 4 அன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தின் பானோ வட்டாரத்தில் அமைந்துள்ள, முழுக்க முழுக்கப் பெண்களைக் கொண்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான பியூரா நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 1.5 மெட்ரிக் டன் புதிய அம்ரபாலி மாம்பழங்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த சரக்கை, கொல்கத்தாவைச் சேர்ந்த மெஸ்ஸர்ஸ் ஜேஜிபி அக்ரோஃப்ரெஷ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், லண்டனுக்கு ஏற்றுமதி செய்தது.

சிம்டேகா மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், முன்னோடி விவசாயிகள் ஆகியோருக்காக, அபேடா அமைப்பு 5 மே 2026 அன்று ஏற்றுமதி சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது. அதைத் தொடர்ந்து இந்த ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. அந்தப் பயிற்சித் திட்டம் ஏற்றுமதித் தேவைகள், தர நிர்ணயங்கள், சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

இந்த முன்முயற்சியானது, இப்பகுதியில் உள்ள விவசாயக் குழுக்களிடையே தரமான உற்பத்தி முறைகளைப் பின்பற்றுவதையும், அறுவடைக்குப் பிந்தைய சிறந்த மேலாண்மையையும், சர்வதேச தரநிலைகளை பின்பற்றுவதையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோட்டக்கலை சாகுபடிக்கு உகந்த வேளாண் பருவநிலைச் சூழல்களை ஜார்க்கண்ட் கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் விளையும் அம்ரபாலி ரக மாம்பழம், அதன் தரத்துக்காகவும் சந்தை அங்கீகாரத்திற்காகவும் பெயர் பெற்றது. இந்த ஏற்றுமதியின் மூலம், சர்வதேச சந்தைகளுக்குப் புதிய பழங்களை ஏற்றுமதி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் இணைகிறது

Leave a Reply