இந்தியா – பிலிப்பைன்ஸ் வர்த்தகம், முதலீட்டிற்கான கூட்டுப் பணிக்குழுவின் 14-வது கூட்டம் மணிலாவில் நடைபெற்றது.

இந்தியா – பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீட்டிற்கான கூட்டுப் பணிக்குழுவின் 14-வது கூட்டம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய வர்த்தகத் துறை இணைச் செயலாளர் அமித் வர்மாவும், பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வதேச வர்த்தகக் குழுவின் வர்த்தக, தொழில் துறை துணைச் செயலாளர் ஆலன் பி கெப்டியும் கூட்டாகத் தலைமை தாங்கினர். மேலும், தொடர்புடைய அமைச்சகங்களின் உயர் மட்டப் பிரதிநிதிகள் காணொளி வாயிலாக இதில் பங்கேற்றனர்.

இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2025-26 நிதியாண்டில் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திரைத்துறை, ஆற்றல், கட்டுமானம், உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மருந்துகள் போன்ற பல்வேறு துறைகளில் கூட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இருதரப்புப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இக்கூட்டம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான வணிகச் சூழலை மேம்படுத்துதல், சுங்கத்துறை ஒத்துழைப்பு, வேளாண் கூட்டுறவு, குறிப்பிட்ட பொருட்களுக்கான சந்தை அணுகல், இருநாட்டு தேசிய நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருதரப்பும் ஆலோசித்தன. ஆசியான் – இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்த மறுஆய்வை விரைவாக முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள், அதன் பின்னர் இருதரப்புக்கும் முன்னுரிமை வாய்ந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, மணிலாவில் செயல்படும் இந்திய வணிகர்களுடனான சிறப்புச் கலந்துரையாடல் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த முக்கிய கூட்டுப் பணிக்குழுவின் அடுத்த கூட்டம் புதுதில்லியில் நடைபெறவுள்ளது.

Leave a Reply