மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஜம்முவில் புதிய மண்டல வானிலை ஆய்வு மையத்தைத் திறந்து வைத்துள்ளார். இது நாட்டின் ஏழாவது மண்டல வானிலை மையமாகும். ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கான வானிலை சார்ந்த பிரத்யேக சேவைகள், பேரிடர் எச்சரிக்கைகளை இந்த மையம் வழங்கும்.
இப்பகுதிகளுக்கு மாவட்ட அளவிலான வானிலை நிலவரம் தொடர்பான கணிப்புகள், மலைப்பகுதி வானிலை அறிவிப்புகள், சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல்கள், பெரு வெள்ளம், மேகவெடிப்பு, பனிச்சரிவு, நிலச்சரிவு போன்ற தீவிர இயற்கைச் சீற்றங்கள் குறித்த எச்சரிக்கைகள் உடனுக்குடன் துல்லியமாக வழங்கும்.
கடந்த பத்து ஆண்டுகளில் இப்பகுதியின் வானிலை உள்கட்டமைப்பு பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2014-ல் இப்பகுதியில் டாப்ளர் வானிலை ரேடார்கள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது நான்கு ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன. ‘மௌசம்’ திட்டத்தின் கீழ் மேலும் ஐந்து ரேடார்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய வானிலை சேவைகள் இமயமலைப் பிராந்திய விவசாயிகளுக்கும், யாத்ரிகர்களுக்கும், பேரிடர் மேலாண்மை முகமைகளுக்கும் பெரிதும் பயனளிக்கும்.
கே.பி.சுகுமார்
