வேலைவாய்ப்பு மற்றும் வணிக நலன்களுடன் இணைக்கப்படும்போது ஒரு மொழி வேகமாக வளர்கிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்.

ஒரு மொழி வேலைவாய்ப்பு மற்றும் வணிகத் தொடர்புகளுடன் இணைக்கப்படும்போது அது வேகமாக வளர்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை மத்திய இணையமைச்சர்  (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்தி மொழி யார் மீதும் திணிக்கப்படவில்லை என்றும், அது அரசுப் பணிகள், வேலைவாய்ப்பு, வணிகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இணைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

புதுதில்லியில் உள்ள அர்வத் ஹாலில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட இந்தி மொழி ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகச் செயல்பாடுகள், டிஜிட்டல் தளங்கள், பொதுத் தொடர்பு ஆகியவற்றில் இந்தி பயன்பாட்டை விரிவுபடுத்துவது பற்றி விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

இக்கூட்டத்தில், பிரயாக்ராஜ் (அலகாபாத்) நாடாளுமன்ற உறுப்பினரும், இந்தி ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான உஜ்வல் ராமன் சிங், குழு உறுப்பினர்களான விபின் கஜூரியா, டாக்டர் ரேணு சைனி ஆகியோருடன், அமைச்சகம் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவைப் போன்ற பலமொழிகள் கொண்ட நாட்டில், அலுவல் மொழி என்பது நிர்வாக விஷயம் மட்டுமல்ல, அது தேசிய ஒருமைப்பாடு மற்றும் தகவல்தொடர்புக்கான ஒரு முக்கிய ஊடகமாகவும் விளங்குகிறது என்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், கடந்த பத்தாண்டுகளில் அலுவல் பணிகளில் இந்தி மொழிப் பயன்பாடு புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது என்றும், நாட்டின் இந்தி பேசாத பகுதிகளில்கூட இந்திக்கு ஆதரவாக ஒரு நேர்மறையான சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பன்னாட்டு நிறுவனங்கள் ஆங்கிலத்துடன் இந்தியிலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களை அதிக அளவில் விரும்புவதால், தென்னிந்தியாவில் ஏராளமான இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து இந்தி மொழியைக் கற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தி மொழியைப் பரப்புவதன் நோக்கம், எந்தவொரு மொழி சார்ந்த அழுத்தத்தையும் உருவாக்குவதல்ல, மாறாகத் தன்னார்வப் பங்கேற்பையும் நடைமுறைப் பயன்பாட்டையும் ஊக்குவிப்பதே என்று டாக்டர் சிங் உறுதிபட தெரிவித்தார். தென்னிந்தியாவைச் சேர்ந்த பல ஊழியர்கள் தற்போது மிகவும் செம்மையான மற்றும் நடைமுறை இந்தியைப் பயன்படுத்துவது, நாட்டின் மாறிவரும் மொழிச் சூழலைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொள்கை மற்றும் நிர்வாக நிலைகளில் ஆலோசனைகளை உடனடியாகச் செயல்படுத்தும் வகையில், டிஜிட்டல் தளங்கள், வாட்ஸ்அப் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply