தமிழக அரசு – கோடைக்காலத்தில் பெய்கின்ற மழை, திடீர் கனமழையால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே மழை, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மாநிலம் முழுவதும் சுமார் 15 மாவட்டங்களிலும், நாளை சுமார் 8 மாவட்டங்களிலும் மழை, கனமழை பெய்யும் எனத் தகவல் தெரிவிக்கின்றன. இன்று சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் நாளையும் அதனைத் தொடர்ந்து வருகின்ற 23 ஆம் தேதி வரை ஆங்காங்கே மழை பெய்யும் என்று தெரிகின்றது.
இந்த மழையானது கோடைக்காலத்தில் பெய்யும் திடீர் மழையாகும். எனவே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இருக்கின்ற நெல்மூட்டைகளை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை தேவை.
கோடைக்காலத்தில் பெய்யும் மழையில் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். அவர்களின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.
குறிப்பாக விவசாயமானது திடீர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடிய நிலையும் உருவாகும்.
இந்நிலையில் விவசாயிகள் மழைப்பாதிப்பை சமாளிப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.
கோடை மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், குடியிருப்போர் பாதிக்கப்படுவதும், கழிவுநீர் குடிநீரில் கலப்பதும், வழக்கமானது என்றாலும் கூட தமிழக அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொது மக்களின் பாதுகாப்பான, சுகாதாரமான குடியிருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மழையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.
தொடர்ந்து வரும் நாட்களில் கோடைமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருக்குமேயானால் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பிற்கும், சிரமமில்லா போக்குவரத்திற்கும் முன்னேற்பாடான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
எஸ்.திவ்யா
