அமெரிக்க அணுசக்தி நிறுவனம், அமெரிக்க-இந்தியா உத்திசார் ஒத்துழைப்பு மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு உயர்நிலை அமெரிக்கத் தொழில் துறைப் பிரதிநிதிகள் குழு, இந்தியாவின் அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து, மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் இன்று (18.05.2026) விரிவான ஆலோசனை நடத்தியது.
இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களில், தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்க வழிவகுக்கும் கொள்கை சீர்திருத்தங்கள், தூய்மையான எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்களில் இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் எஸ் கோகலே, அணுசக்தித் துறை அதிகாரிகள், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய இணைமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா தனது அணுசக்தித் திறனை தற்போதைய 8.8 ஜிகாவாட்டிலிருந்து 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார். அணுசக்தித் துறையில் வெளிநாட்டுப் பங்களிப்பு உட்பட தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய சீர்திருத்தமான, சாந்தி சட்டம், 2025-ஐ இந்தியா சமீபத்தில் இயற்றியுள்ளது என்று அமைச்சர், அமெரிக்கத் தூதுக்குழுவிடம் தெரிவித்தார். இந்தச் சீர்திருத்தம், இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தில் சிறந்த சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். இத்துறையில் கூட்டு வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்தச் சட்டத்தின் கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தித் துறையில் நடைமுறை சார்ந்த, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு பகிரப்பட்ட நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் நிறைவடைந்தது
எஸ்.சதிஸ் சர்மா
