அஇஅதிமுக பொதுச் செயலாளரும், மேனாள் முதலமைச்சரும், மேனாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று (18.05.2026, திங்கள்கிழமை) மாலை சுமார் 7-38 மணியளவில் மூன்று பக்கங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கால்களில் விழுவதைப் பற்றியெல்லாம் எடப்பாடி கே.பழனிச்சாமி எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டிருப்பதை நினைக்கும் போது; முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சொன்னது தான் தற்போது நினைவுக்கு வருகிறது. எனவே, மல்லாந்துப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் முயற்சியை எடப்பாடி கே. பழனிச்சாமி இன்றோடு நிறுத்திக் கொள்வது அவருக்கு நல்லது.
72 வயதான எடப்பாடி கே.பழனிச்சாமியை, 48 வயதான உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்த போதிலும், தேர்தல் முடிவு வந்தவுடன் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்ற கெட்ட நோக்கத்தில், கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், தனது மகனை உதயநிதி ஸ்டாலினிடம் தூது அனுப்பி குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆவதற்கு எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகிய நீங்கள் முயற்சித்த காரணத்தால் தான், அஇஅதிமுக கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக தலைவர் ஜோசப் விஜயை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள்.
அதன் பிறகு தான் முதலமைச்சராக பதவி ஏற்றபின் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், உங்கள் துரோகத்தைப் புரிந்துக்கொண்டு உங்களை சந்திக்காமல், சி.வி .சண்முகம் தலைமையிலான குழுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். ஜோசப் விஜயின் நேரடி அரசியல் எதிரியான திமுக தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மு .க. ஸ்டாலினை முதலமைச்சர் பதவி ஏற்ற உடனே நேரில் அவரது வீட்டிற்கு சென்று வாழ்த்துப் பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், உங்களை நேரில் சந்திக்க உங்கள் வீட்டிற்கோ, அஇஅதிமுக கட்சி அலுவலகத்திற்கோ வராததற்கு என்ன காரணம்? உங்களின் பதவி வெறிதான். இதை கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அடுத்து குதிரைப் பேரத்தைப் பற்றியெல்லாம் கூச்சமே இல்லாமல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருக்கும் தாங்கள், 26 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து பயந்து, எடப்பாடி தொகுதியில் த.வெ.க (TVK) சார்பில் அறிவிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது மாற்று வேட்பாளர் அவரது மனைவி நித்யா ஆகியோரின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனைச் செய்வதற்கு முன்பாகவே அவர்கள் இருவரையும் குதிரைப் பேரத்தில் உங்கள் ஆதரவாளர்கள் தூக்கிச் சென்றதை நீங்கள் மறந்து விட்டீர்களா? அன்று எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஒருவரை தேர்தலில் நிற்க விடாமல் செய்த பாவத்திற்கு, இன்று உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 24 க்கும் மேற்பட்டோர் தானாகவே முன்வந்து ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ளார்கள்! இதற்கு பெயர்தான் கர்மா! இறை நம்பிக்கையுள்ள உங்களுக்கு இது நன்றாகவே புரியும்.
தமிழ்நாட்டில் தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காக, நீங்கள், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று குறுக்கு வழியில் முதலமைச்சராவதற்கு முயற்சித்த உண்மையை உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், திமுகவும், வலதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமையும் வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவித்த பிறகும், அதை வெட்கத்தோடு ஒத்துக்கொள்ள மனமில்லாமல், அனைத்துப் பழிப் பாவங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது போடுவது எந்த வகையில் நியாயம்?
தற்போது நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 34.92% (17226209) வாக்குகளைப் பெற்று 108 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. இதே தேர்தலில் 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 24.19% (11929144) வாக்குகளைப் பெற்று 59 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் எடப்பாடி கே பழனிச்சாமி ஆகிய உங்கள் தலைமையிலான அஇஅதிமுக 172 தொகுதிகளில் போட்டியிட்டு 21.21%(10462146) வாக்குகளைப் பெற்று கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 47 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
கட்சித் தொடங்கி சுமார் 26 மாதங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி, நெருப்பாற்றில் நீந்தி தமிழ்நாட்டில் 233 தொகுதிகளில் தன்னந்தனியாக போட்டியிட்டு வாக்காளர்களுக்கு பணமோ, பரிசுப் பொருட்களோ எதுவும் கொடுக்காமல் மக்களை மட்டுமே நம்பி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 34.92% (1,72,26,209) வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளை வென்று தமிழக அரசியலில் வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம், மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சி என்று வாய் கூசாமல் சொல்வதற்கு எப்படி தான் உங்களுக்கு மனசு வருகிறதோ தெரியவில்லை.
24.19% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள திமுக தலைமையும், 21.21% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள அஇஅதிமுக தலைமையும் ஆட்சி அமைக்க ஆசைப்படும்போது, 34.92 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? நல்லா இருக்கியா உங்கள் நியாயம்.
அஇஅதிமுக தலைமை தற்போதைய தேர்தல் தோல்விக்கு உண்மையானக் காரணங்கள் என்ன என்பதை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி மனசாட்சியோடு மறுபரிசீலனைச் செய்து கட்சியில் உள்ள குற்றம் குறைகளையும், கோஷ்டி பூசல் குளறுபடிகளையும் சரி செய்ய வேண்டுமே தவிர, வெற்றிப் பெற்ற தவெக கட்சியின் மீது அவதூறுகளைப் பரப்பி உங்களின் தவறுகளை மூடி மறைக்க முயலக் கூடாது. அப்படி செய்தால் அது அறம் ஆகாது.
எடப்பாடி கே.பழனிச்சாமி உண்மையிலுமே ஒரு நல்ல மனிதராக, ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால், தேர்தல் முடிவு வந்த உடனே, மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றுவது தான் அஇஅதிமுகவின் தலையாய கடமை, இந்த தேர்தலின் உண்மையான நோக்கமும் அதுதான், நாங்கள் செய்ய நினைத்த அந்தப் பணியை, ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சிறப்பாக செய்து முடித்திருக்கிறது. இது எங்களுக்கும் ஒரு வகையில் மகிழ்ச்சி தான்! இதன் மூலம் ஒரு பொது நோக்கம் நிறைவேறி இருக்கிறது. எனவே, 108 தொகுதிகளில் தவெக வெற்றிப் பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு இது போதுமானதல்ல; இந்நிலையில் மறுபடியும் ஒரு பொதுத் தேர்தலை மக்கள் மீது நாங்கள் திணிக்க விரும்பவில்லை. எனவே மக்கள் மற்றும் மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தவெகவிற்கு நாங்கள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறோம். இந்த பொது நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக (NDA) கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம்! என்று எடப்பாடி கே. பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் அவரது அரசியல் செல்வாக்கு மக்கள் மத்தியில் பல மடங்கு உயர்ந்திருக்கும். இதற்கு பாஜகவும் எந்த எதிர்ப்பும் தெரிவித்து இருக்காது.
எனவே, அஇஅதிமுகவின் இன்றைய பிளவிற்கும், பிரச்னைகளுக்கும் எடப்பாடி கே பழனிச்சாமியின் பதவி வெறியும், பேராசையும் தான் காரணம். இப்படி அவர் செய்வதை எல்லாம் செய்து விட்டு கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும் விரைவில் அம்மாவின் ஆட்சி அமையும் என்று அவரது அறிக்கையில் இன்று குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்தே தெரிகிறது எடப்பாடி கே. பழனிச்சாமி எவ்வளவு பெரிய ஆபத்தான மனிதர் என்று.
அஇஅதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரையும், அவர் வழி பின்பற்றி சாகும் வரை திமுகவின் எதிர்ப்பில் மிகவும் உறுதியாக செயல்பட்ட இரும்பு பெண்மணி செல்வி ஜெ.ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு, அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத, முதுகெலும்ப இல்லாத ஒரு மூத்த நடிகரின் சொல்பேச்சு கேட்டு குறுக்கு வழியில் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற முயற்சித்து, அந்த முயற்சி தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைகளை எல்லாம் மூடி மறைப்பதற்காகதான் எடப்பாடி கே. பழனிச்சாமி இந்த அறிக்கை நாடகத்தை இன்று அரங்கேற்றியுள்ளார். குறுக்கு வழியில் முதலமைச்சராக ஆக முடியவில்லையே என்ற விரக்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது பழி போட முயற்சிக்கிறார்.
இது ஒரு தோட்டத்து பூசணிக்காயை, ஒரு தட்டு சோற்றில் மறைக்கும் முயற்சி என்பது மக்களுக்கு தெரியும்.
எனவே, கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை!
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD
