மீள்திறன் கொண்ட மலைச் சாலைகளுக்கான நிலச்சரிவுத் தணிப்பு குறித்த பயிலரங்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், இணை அமைச்சர்கள் திரு அஜய் தம்டா, திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, “தாங்குதிறன் கொண்ட மலைச் சாலைகளுக்கான நிலச்சரிவு தணிப்பு நடவடிக்கைகள்” என்ற தலைப்பிலான பயிலரங்கில் உரையாற்றினார்.

புவியியல் ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய இமயமலைப் பகுதியில் உள்ள சிக்கலான நிலப்பரப்பு, சரிவுகளின் நிலையற்ற தன்மை மற்றும் நிலச்சரிவுகள், மேகவெடிப்புகள், நிலநடுக்கங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகள் காரணமாக, காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது என்று திரு நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார். உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் சிறப்பு நிலச்சரிவு சிகிச்சைக்காக டி.எச்.டி.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்துடனும், புவி-பேரிடர் தணிப்புக்காக பாதுகாப்பு புவி-தகவல் ஆராய்ச்சி நிறுவனத்துடனும், சுரங்கப்பாதை மற்றும் வழித்தடத் திட்டங்களுக்கான புவியியல் ஆய்வுகள் மற்றும் தரவுப் பகிர்வுக்காக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதே முக்கிய முன்னெடுப்புகள் என்று அமைச்சர் தெரிவித்தார். தேசிய பாறை இயக்கவியல் நிறுவனத்துடனான ஒத்துழைப்பு, புவித்தொழில்நுட்ப ஆய்வு, வடிவமைப்பு சரிபார்ப்பு, சுரங்கப்பாதை பாதுகாப்புத் தணிக்கைகள், கருவி கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் நீடித்த உழைப்பை உறுதி செய்வதற்காக, மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு சரிவு நிலைப்படுத்தலுக்கு முன்னுரிமை அளிக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி மலைச்சரிவு உறுதியற்ற தன்மை குறித்த வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் ஆதரவு வழங்கப்படுகிறது. கூடுதலாக, உத்தரகாண்டில் உள்ள சார்தாம் வழித்தடத்தின் 100 கி.மீ. நீளப் பகுதியில் இன்சார் (InSAR) அடிப்படையிலான நிலச்சரிவு கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

LiDAR மற்றும் UAV-கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நிலச்சரிவு பாதிப்பு வரைபடங்கள் மற்றும் வரலாற்றுத் தரவுகளை DPR தயாரிப்பில் ஒருங்கிணைத்து, விரிவான நிலப்பரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு கட்கரி மேலும் வலியுறுத்தினார். மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பான, தடையற்ற மற்றும் நீடித்த நெடுஞ்சாலைகளை அமைப்பதில் மோடி அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Leave a Reply