இலட்சதீவு பகுதிகளில் கரை ஒதுங்கிய 45 தமிழக மீனவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்!

FISHERMEN ARRIVED COCHIN FISHERMEN ARRIVED COCHIN-1

ஓகி புயலால் பாதிக்கப்பட்டு, கேரள மாநில கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்டு, பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் வி.அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஓகி புயலினால் பாதிக்கப்பட்டு, இலட்சதீவு கவரட்டி பகுதியில் கரை ஒதுங்கிய தமிழகத்தை சார்ந்த 45 மீனவர்கள் அனைவரும், கப்பல் மூலம் இன்று (09.12.2017) காலை 10.30 மணியளவில் பாதுகாப்பாக கொச்சின் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கொச்சின் வந்தடைந்த இம்மீனவர்கள் கன்னியாகுமாரி, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களை சார்ந்தவர்களாவர்.

கொச்சின் துறைமுகம் வந்தடைந்த மீனவர்களை, அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் வி.அருண்ராய் தலைமையில் நடைபெற்றது.

குறிப்பாக, மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்றடைய ஏதுவாக, 3 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மீனவர்கள் அனைவருக்கும் தலா ரூ.2,000/உதவித்தொகையும், மருத்துவ பரிசோதனை, உணவு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

-ஜி.கஜேந்திரன்.