ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய எதிர்பார்ப்புகளைச் செயல்படுத்த ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து உருவான ஸ்டார்ட்அப்கள், காப்புரிமைகள், தொழில்நுட்பங்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த உந்துசக்தியாக இருக்கும்
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உலகளவிலான சந்தைகள், முதலீடுகள், நிதி திரட்டல் போன்றவற்றுக்கு வழி ஏற்படுத்துதல்
உத்திசார் பல்கலைக்கழக ஒத்துழைப்புகள், தொழில் கூட்டாண்மைகள் மூலம் உலக அரங்கில் ஐஐடி மெட்ராஸ்-ன் கல்வித் திட்டங்களை இடம்பெறச் செய்தல்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) உலகளாவிய எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் நோக்கில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளது. இக்கல்வி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப சுற்றுச்சூழலில் இருந்து வெளிவரும் ஸ்டார்ட்அப்களுக்கு உலகளவிலான சந்தைகள், முதலீடுகள், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி, உத்திசார் பல்கலைக்கழக ஒத்துழைப்புகள் மற்றும் தொழில் கூட்டாண்மை மூலம் முதுகலைக் கல்வி மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு இது உந்துசக்தியாக இருக்கும்.

இதனை செயல்படுத்துவதற்காக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான திரு. திருமலை மாதவ் நாராயணை இக்கல்வி நிறுவனம் நியமித்துள்ளது.

“ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை” (IIT Madras Research Foundation) என்பது ஐஐடி மெட்ராஸ்-ன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துதல், கண்டுபிடிப்பு- தொழில்முனைவு ஆகியவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்துதல், தொழில்- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மைகளின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தல் போன்ற நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தொலைநோக்குத் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டிய ஐஐடி மெட்ராஸ்-ன் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இந்தியாவின் விஸ்வகுரு லட்சியத்தில் இணைந்து செயல்படவும், உலகளவிலான ஸ்டார்ட்அப்களை உருவாக்கவும் ஐஐடிஎம்ஆர்எஃப் ஓர் உத்திசார் முயற்சியாகும். தொழில்துறையில் சிறந்து விளங்கும் திரு. நாராயண் அவர்கள் இந்த முன்முயற்சிக்கு தலைமை நிர்வாகியாக இருந்து வழிநடத்துவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply