தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

தமிழ்நாட்டில் அன்னைத் தமிழைக் காப்பதற்காக ‘தமிழைத்தேடி…’ இயக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன. அடித்தட்டு மக்களிடம் கூட பிறமொழி கலப்பின்றி உரையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதே தமிழைத் தேடி இயக்கத்தின் வெற்றி தான். தமிழன்னைக்கு தொண்டு செய்யும் இந்த உன்னத பணியில், அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழார்வலர்களாகிய நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த மடலை உங்களுக்கு நான் வரைகிறேன்.

தமிழை வளர்ப்பதாக இருந்தாக இருந்தாலும், சிதைவிலிருந்து மீட்பதாக இருந்தாலும், தமிழில் தேவைக்கு ஏற்ற புதிய சொற்களை கண்டறிவதாக இருந்தாலும் அது தனிமனிதர்களால் மட்டுமே சாத்தியமாகும் செயல் அல்ல. இந்தப் பணிகளை குழுவாக செய்யும் போது அவை வேகம் பெறும். அதுவே இப்பணிகளை இயக்கமாக மாற்றும் போது, அதன் முன்னேற்றம் புயலை விட அதிக வேகம் கொண்டதாக இருக்கும்.

உ.வே.சாமிநாதய்யர் மட்டும் பழங்கால ஓலைச்சுவடிகளை தேடித்தேடிக் கண்டுபிடித்து அச்சுப் பதிப்பு செய்திருக்காவிட்டால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், குறுந்தொகை உள்ளிட்ட 90&க்கும் மேற்பட்ட நூல்கள் பற்றி நமக்கு தெரிந்திருக்காமலேயே போயிருக்கக் கூடும். உ.வே.சா அவரது 18-ஆவது வயதில் தொடங்கி 87 வயதில் இறக்கும் வரை 69 ஆண்டுகள் அந்தப் பணிக்கு மட்டுமே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். தனி ஒருவராக பாடுபட்ட அவரால் சராசரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு நூலை மட்டுமே பதிப்பிக்க முடிந்தது. அதுவே நமக்கு பெரும் கருவூலமாகியிருக்கிறது. அந்தப் பணிக்கு சிலர் உதவி செய்தார்களே தவிர, அந்தப் பணி குழு சார்ந்த பணியாகவோ, இயக்கமாகவோ மாறவில்லை. அவ்வாறு மாறியிருந்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்று இன்னும் ஆயிரமாயிரம் தமிழ் இலக்கியங்கள் நமக்கு கிடைத்திருக்கலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியில் திட்டமிட்டு கலக்கப்பட்ட பிறமொழிச் சொற்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏறக்குறையை தமிழ் மொழியையே மென்று விழுங்கத் தொடங்கியிருந்தன. தமிழர்களின் உரையாடல்களில் பிறமொழிச் சொற்களுக்கு நடுவில் தான் தமிழ்ச் சொற்களைத் தேட வேண்டியிருந்தது. அத்தகைய அவலநிலையை மாற்றுவதற்காகத் தான் மறைமலையடிகள் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப்பாவாணர், பரிதிமாற் கலைஞர், கி.ஆ.பெ.விசுவநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் இணைந்து தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தனர். அந்த இயக்கம் செய்த பணி தான் தமிழ் மொழி மேலும், மேலும் சிதைவதைத் தடுத்து நிறுத்தியது. அந்தக் காலத்தில் தான் தனித்தமிழ்ச் சொற்களின் பயன்பாடு அதிகரித்தது.
அப்போது தான் பிறமொழிகளில் சூட்டப்பட்ட பெயர்கள் தனித்தமிழுக்கு மாற்றியமைக்கப்பட்டன. மொழி காக்கும் பணி தனித்தோ, குழுவாகவோ இல்லாமல் இயக்கமாக மாற்றப்பட்டால், அது எத்தகைய வெற்றியைத் தரும் என்பதற்கு தனித்தமிழ் இயக்கம் சான்று.

தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையும், முழக்கமும் அரை நூற்றாண்டுகளாக எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அது உச்சத்தை அடைந்து தமிழக அரசை இறங்கி வந்து பேச வைத்தது நா. அருணாசலம் ஒருங்கிணைப்பில் தமிழ்ச்சான்றோர் பேரவை நடத்திய 102 தமிழறிஞர்களின் சாகும்வரை பட்டினிப் போராட்டம் தான். தமிழ்நாட்டை உலுக்கிய அப்போராட்டத்தால் தான் தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் ஓரளவுக்காவது தமிழ் மொழியில் எழுதப் பட்டுள்ளன என்றால் அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான். திட்டமிட்டு நாம் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பதற்கு இதுவே சான்று. மொழி, இனம் கருதி மேற்கொள்ளப்படும் எந்தப் பணிக்கும் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்; அதை இயக்கமாக மாற்ற வேண்டும் என்பது தான் தேவையாகும்.

தமிழைத்தேடி இயக்கத்தின் நோக்கங்கள் விரிவானவை. கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுதுவதில் தொடங்கி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பயிற்றுமொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்பது வரை எண்ணற்ற மாற்றங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்,‘எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்’ என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் தமிழைத்தேடி இயக்கத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நோக்கிய பயணத்தில் முன்னேற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன.

ஆனால், இந்த நோக்கங்கள் நிறைவேற உழைக்க வேண்டியது அனைவரின் கடமை. குறிப்பாக, தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் ஆகிய உங்களுக்கு இதில் பெரும் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால், மற்ற அனைவரையும் விட நீங்கள் அன்னைத் தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதையும் கடந்து நீங்கள் தமிழ்மொழியால் அடையாளம் பெற்றவர்கள். அதற்காக நன்றி செலுத்த வேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது.

ஆகவே, அன்னைத் தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் ஆகிய நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் மாநாடுகளைக் கூட்டி, அன்னைத் தமிழைக் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்; தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானங்கள் செயல்படுத்தப்படுவதற்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் குறைந்தது 10 பேர் கொண்ட குழுக்களை அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடி, தமிழ் வளர்ச்சிக்கான பணிகளையும், பரப்புரைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக தமிழைத் தேடி இயக்கம் வடிவமைத்து வெளியிட்டுள்ள தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகிய பதாகைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, நீங்கள் பணி செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள். ஊர்கூடித் தான் தேர் இழுக்க வேண்டும். எனவே, தமிழறிஞர்களே, தமிழ் உணர்வாளர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் ஆசிரியர்களே வாருங்கள்… ஒன்றாக கைக்கோர்ப்போம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை விரைவில் உருவாக்குவோம்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply