தமிழக மீனவரின் உயிரிழப்புக்கு காரணமான வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்டதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சிக்குரியது.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு மீனவர் குண்டடிபட்டு ஆற்றில் விழுந்துள்ளார். தீயனைப்பு வீரர்களின் தேடுதலுக்குப் பிறகு அந்த மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் தமிழக மீனவர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கிறார்கள். மேலும் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் வாழும் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

வனப்பகுதிக்குள் நுழைந்த தமிழக மீனவர்களைப் பாதுகாப்பாக பிடித்து, விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அதனை விடுத்து, துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது,

பதற்றத்தில் இருந்து மக்கள் விடுபடவும், இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக தமிழக அரசு, கர்நாடக அரசுடன் தொடர்பு கொண்டு தமிழக மீனவரின் உயிரிழப்புக்கு காரணமான வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

மேலும் தமிழக அரசு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் சம்பந்தமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ‌.

எஸ்.திவ்யா

Leave a Reply