இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சம்பந்தமான அரசாணை அமலுக்கு வர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 03.01.2023 செவ்வாய் கிழமை இந்திய அரசிதழில், 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட திருத்தம் (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) சம்பந்தமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

காரணம் பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று நரிக்குறவன் என்கின்ற குருவிக்கார இன மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். அப்படி சேர்த்தால் தான் அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றிற்கான

சலுகைகள், நலத்திட்டங்கள் கிடைத்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்.

எனவே நாடு முழுவதும் உள்ள நரிக்குறவன் என்கின்ற குருவிக்கார இன மக்களின் நலன் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது சம்பந்தமாக மசோதாவை கொண்டுவர வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

திருத்தப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதன் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களுக்கான விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இப்படி நிறைவேற்றப்பட்ட மசோதாவானது சட்டமாக நிறைவேற்றப்பட்டு, இந்திய அரசிதழில் வெளிவந்தால் அது நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதா இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலாகி, இந்திய அரசிதழில், அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

இது நரிக்குறவன் என்கின்ற குருவிக்கார இன மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகும்.

குறிப்பாக நரிக்குறவன் என்கின்ற குருவிக்கார இன மக்களை பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்கும் 37 ஆவது இனமாக மத்திய அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு, உடனடியாக இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கேற்ப, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள நரிக்குறவன் என்கின்ற குருவிக்கார இன மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அவர்களுக்கான அரசின் அனைத்து சலுகைகளையும் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு, நரிக்குறவன் என்கின்ற குருவிக்கார இன மக்கள் நலன் காக்க உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply