ஜி. நாராயணம்மா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் மகிளா தக்ஷதா சமிதி கல்லூரிகளின் மாணவர்களிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

தொழில்நுட்பத்தின் பலன்கள் தொலைதூரப் பகுதிகளையும், ஏழை எளிய மக்களையும் சென்றடைவதுடன், சமூக நீதிக்கான கருவியாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். ஐதராபாத்தில் இன்று ஜி. நாராயணம்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (மகளிருக்கானது) பிஎம் மலானி நர்சிங் கல்லூரி மற்றும் மகிளா தக்ஷதா சமிதியின் சுமன் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அவர் உரையாற்றினார்.

கணினிகள், மருத்துவ உபகரணங்கள், இணையம், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களில் பொறியியல் பெரும் பங்காற்றியுள்ளதாக  குடியரசுத் தலைவர் கூறினார். சிந்தனைக்கு எட்டாத, முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படும் இன்றைய உலகில் ஒரு தொழிலாக பொறியியலின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

உலகத்தை சிறந்த இடமாக மாற்றும் ஆற்றல் பொறியியலாளர்களுக்கு  உள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். அவர்கள் கண்டுபிடிக்கும் தீர்வுகளும் எதிர்காலத்தில் அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களும் மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  அண்மையில்  சிஓபி 27 மாநாட்டில், பூமியை பாதுகாப்பான கிரகமாக மாற்றும் தனது தொலைநோக்கை  இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்னும் மந்திரத்தை இந்தியா முன்வைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் இயக்கம், எத்தனால் கலந்த எரிபொருள்கள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் புதிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த முன்முயற்சிகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் சிறந்த முடிவுகளை நாம் பெறலாம் என அவர் கூறினார்.

 இன்றைய உலகின் தொழில்நுட்பத்தில், சமூக , பொருளாதார, அரசியல், கல்வி, சுற்றுச்சூழல் பரிமாணங்கள் உள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை தரமானதாக மேம்படுத்த தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் பயன்கள் மக்களை சென்றடையும் வகையில் பொறியியலாளர்கள் செயல்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் பரிமளிப்பதை சுட்டிக்காட்டினார். தொலைத் தொடர்பு,தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, எந்திர வடிவமைப்பு, கட்டுமானப்பணிகள், செயற்கை நுண்ணறிவு உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் பங்களித்து, பிரகாசித்து வருவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.  அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியமானவை என்று கூறிய அவர், தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும் என்று தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply