எய்ம்ஸ் பீபிநகரில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா இன்று எய்ம்ஸ் பீபிநகரில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்  சேவைகளை தொடங்கி வைத்து, துறை சார்ந்த நிபுணர் ஆலோசனையின் நடைமுறை விளக்கத்தை காணொளிக்காட்சி மூலம் பார்த்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், மகரிஷி சரக் ஷபத்தை புதிதாக சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு (2022-23) வழங்கி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஒவ்வொரு மருத்துவ மாணவர்களும் வெற்றி பெற, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய இரண்டு முக்கியமான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆரோக்கியத்தை வணிகமாக கருதக்கூடாது என்றும்  அது மனித குலத்திற்கான சேவை என்றும் திரு மாண்டவியா வலியுறுத்தினார். நெருக்கடியான காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல், உலகெங்கிலும் உள்ள உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை, கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய விலையில் இந்தியா எவ்வாறு வழங்கியது என்பதை நினைவுகூர்ந்த அவர், அது ‘வசுதெய்வ குடும்பம்’ –உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்றார்.

இளம் மருத்துவர்கள், ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யுமாறு எய்ம்சில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டு, பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினார்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்பது நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.  ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்  அட்டையின் உதவியுடன், நோயாளிகள் தங்கள் மருத்துவப் பதிவுகளைக் கொண்டு எங்கும், எந்த நேரத்திலும் இந்தியா முழுவதும் அணுகலாம்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பதிவில்,

“எய்ம்ஸ் ஒரு மதிப்புமிக்க நிறுவனம். அதன் புகழ் என்னவென்றால், எய்ம்சில் சிகிச்சை இல்லை என்றால், நாடு முழுவதும் வேறு எங்கும் சிகிச்சை கிடைக்காது என்று மக்கள் நினைக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply