“அழுக்கைப் போக்க சோப்பு; ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு”!- சிரிப்பாய் சிரிக்கும் சிபிஐ.

புதிய தற்காலிக சிபிஐ. இயக்குனர் நாகேஸ்வர ராவ்.

ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனரை நீக்கி விட்டு, புதிய இயக்குனரை மத்திய அரசு நியமித்துள்ளது. நள்ளிரவு 2 மணிக்கு புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் பொறுப்பேற்று, அலோக் குமார் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா மீதான புகார்களை விசாரிக்க துவங்கி உள்ளார்.

அவர்களுக்கு ஆதரவான சிபிஐ அதிகாரிகளை பலரையும் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். இதற்காக புதிய குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார். இச்சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவோடு இரவாக மாற்றப்பட்ட சிபிஐ. இயக்குனர் அலோக் குமார் வர்மா.

மத்தியப் புலனாய்வுத் துறையின் நம்பகத் தன்மை தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. சிபிஐ இயக்குனர்களே இந்த லட்சணத்தில் இருந்தால், இவர்கள் விசாரித்த வழக்கெல்லாம் எந்த லட்சணத்தில் இருக்கும்?

அது சரி, மத்தியப் புலனாய்வுத் துறை என்றால் என்ன? அவற்றின் தோற்றமும் – வளர்ச்சியும்; அந்த அமைப்பு இதுவரை சந்தித்தச் சாதனைகளும் – சோதனைகளும்!- இதோ, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI) குற்றம் மற்றும் நாட்டுப்பாதுகாப்பு விசயங்களை ஆராயும் இந்திய அரசின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும். மேலும், பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் இது உள்ளது. (Central Bureau of Investigation-CBI) என்பதின் சுருக்கம்தான் சி.பி.ஐ என்று அழைக்கப்படுகிறது.

இந்த அமைப்பு சிறப்புக் காவல் நிறுவனத்திலிருந்து 1963-ல் தோற்றுவிக்கப்பட்டது. 

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தின்போது ஊழல் மற்றும் கையூட்டு வழக்குகளை ஆராய்வதற்காக 1941-ஆம் ஆண்டு சிறப்புக் காவல் நிறுவனம் (Special Police Establishment-SPE) பிரித்தானிய இந்திய அரசால் அமைக்கப்பட்டது.

போர் முடிவடைந்த பின்னரும் கூட, மத்திய அரசு அதிகாரிகள் தொடர்பான ஊழல், கையூட்டு வழக்குகளை ஆராய அந்நிறுவனத்தின் பணி தேவைப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு 1946-ல் கொணரப்பட்ட தில்லி சிறப்புக்காவல் நிறுவனச்சட்டம், சில மாற்றங்களுடன் இந்நிறுவனம் தொடர்ந்து செயலாற்ற வழி வகை செய்தது. இச்சட்டத்தின்படி, போர்த்துறையின் கீழ் இருந்த சிறப்புக் காவல் நிறுவனம், உள்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, அதன் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டது.

மத்திய ஆட்சிப் பகுதிகளிலும், தொடர்புடைய மாகாணங்களின் ஒப்புதலோடு மாகாணங்களிலும், அதன் பணிகள் செயலாக்கம் பெற்றன.

இந்திய விடுதலைக்குப்பின், 1960-களில் கால மாற்றத்திற்கேற்ப சிறப்புக் காவல் நிறுவனத்தின் அமைப்பிலும், செயல்பாடுகளிலும் மாற்றம் தேவைப்பட்டது.

1946-ஆம் ஆண்டின் தில்லி சிறப்பு போலீஸ் படையின் கீழ், 1963-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த நிர்வாக ஆணையின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட புலனாய்வு அமைப்புதான் சிபிஐ. இதற்கு மத்திய அமைச்சரவையோ (அல்லது) குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்1, 1963 -ல் சி.பி.ஐ-யின் முதல் இயக்குனராக டி.பி.கோஹ்லி பொறுப்பேற்றார். ஏப்ரல்-1, 1963 முதல் மே-31, 1968 வரை சிறப்புக்காவல் துறையின் தலைமைக் காவல் ஆய்வாளராக இவர் பதவி வகித்தார். அவரது தொலைநோக்கு சிந்தனையால், இவ்வமைப்பு மிகச்சிறந்த புலனாய்வு முகமையாக வளர்ச்சியடையத் தொடங்கியது.

1987-ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்புப் பிரிவு மற்றும் குற்றப்பிரிவு என இரண்டு தனி சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

பொருளாதாரக் குற்றங்கள் தவிர்த்து, பொதுவான குற்றங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் குற்றப்பிரிவு உருவாக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சி.பி.ஐ மத்திய அரசு பட்டியலில் இருப்பதால், குற்றங்கள் சம்மந்தமான அறிக்கைகள் அனைத்தையும், மத்திய அரசுக்கே தாக்கல் செய்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள் கடத்தல், தீவிரவாதம் முதலான வழக்குகளில் சி.பி.ஐ புலனாய்வு  செய்கிறது.

அண்மைக்காலமாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சில குறிப்பிடத்தக்க வழக்குகளைப் ஆராயுமாறு சி.பி.ஐ.க்குப் பரிந்துரைக்கின்றன.

தேசியப் பொருளாதார நலனைக் காப்பதிலும், இவ்வமைப்பு குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. சி.பி.ஐ. இந்தியாவின் முதன்மைக் காவல் புலனாய்வு முகமையாகும்.

பன்னாட்டுக் காவல் துறையின் சார்பாக இந்தியாவில் நடைபெறும் புலனாய்வுகளை ஒருங்கிணைக்கிறது.

சி.பி.ஐ. குற்ற வழக்குகளை மூன்று பிரிவுகளில் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. 

1. ஊழல் எதிர்ப்புப் பிரிவு: அனைத்து மத்திய அரசுத்துறைகள், மத்திய நிதித்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்புடைய ஊழல் மற்றும் ஏய்ப்பு வழக்குகளைப் புலனாய்கிறது.

2. பொருளாதாரக் குற்றப்பிரிவு: வங்கி மற்றும் நிதி ஏய்ப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் அந்நியச்செலாவணிக் கையாடல்கள், பேரளவிலான போதைமருந்து மற்றும் பதுக்கல் தொடர்பான வழக்குகளைப் புலனாய்கிறது.

3. குற்றப்பிரிவு (தனி): மாபியா கும்பல்களால் நிகழ்த்தப்படும் பணயத்துக்கான ஆள் கடத்தல், குண்டுவெடிப்பு, தீவிரவாதச்செயல்கள் தொடர்புடைய வழக்குகளைப் புலனாய்கிறது.

மத்தியப் புலனாய்வுத் துறை செயலகம் அதன் இயக்குநரால் தலைமை வகிக்கப்படுகிறது. அவர் தலைமைக் காவல் இயக்குநர் (அல்லது) மாநிலக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தரத்திலான இந்தியக் காவல் துறை (ஐ.பி.எஸ்) அதிகாரியாக இருப்பார். சி.வி.சி (CVC Act 2003) சட்டத்தின்படி, சி.பி.ஐ. இயக்குநர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மேலும், மத்தியப் புலனாய்வுத் துறைச் செயலகத்தில் சிறப்பு இயக்குநர், கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், துணை தலைமைக் காவல்துறை ஆய்வாளர், உயர் காவல் துறைக் கண்காணிப்பாளர், காவல்துறைக் கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர், துணை காவல்துறைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளர், உதவித் துணை ஆய்வாளர், தலைமைக் காவலர், உயர் காவலர், காவலர்.. என, அடுக்கடுக்கான நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

மத்தியப் புலனாய்வுத் துறைச் செயலகத்தின் அதிகாரவரம்பு தில்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் மூலம் (DSPE1946) வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் மத்திய ஆட்சிப்பகுதிகளின் காவல் துறைக்கு இருப்பதை ஒத்த அதிகாரங்களையும், பொறுப்புகளையும், சிறப்புக் காவல் நிறுவனத்துக்கு (சி.பி.ஐ) வழங்குகிறது.

தில்லிக்குக் கிழக்கே 40 கி.மீ தொலைவில், உத்திரப்பிரதேச மாநிலம் காசிராபாத்தில் 26.5 ஏக்கர் பரப்பளவில் மத்தியப் புலனாய்வுச் செயலகப் பயிற்ச்சி மையம் (CBI Acadamy) அமைந்துள்ளது. பயிற்சிகள் தில்லி லோக்நாயக் பவனிலும், ஐதராபாத்திலும் வழங்கப்படுகின்றன.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு, பிரியதர்சினி மத்தூ கொலை வழக்கு, நிதாரி கொலைகள், தாவூத் இப்ராகிம் வழக்கு, சோதரி அபயா கொலை வழக்கு முதலானவை சி.பி.ஐ. புலனாய்ந்த வழக்குகளில் முதன்மையானவை.

ஜோகிந்தர் சிங், பி.ஆர்.சர்மா முறையே இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் இருந்த காலக்கட்டத்தில் சி.பி.ஐ.யில் நடைபெற்ற ஊழல்கள் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமானது.

இப்படி வரலாற்று சிறப்பு மிக்க மத்தியப் புலனாய்வுத் துறையில், சமீபக் காலமாக அரசியல் தலையீடும், அதிகாரப் போட்டியும், ஊழல், முறைகேடுகளும் தலைவிரித்து ஆடுகிறது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதைக்கிறது.

மத்தியப் புலனாய்வுத் துறையின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, “அழுக்கைப் போக்க சோப்பு; ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு” என்ற வார்த்தைகள்தான் என் நினைவுக்கு வருகிறது.

–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

2 Comments

  1. K.Venkataraman October 25, 2018 5:19 pm
    • kumar October 25, 2018 8:00 pm

Leave a Reply