நடிகர் எஸ்.வி.சேகர் எப்போது கைது செய்யப்படுவார்?- முழு விபரம்.

தி வீக் (The Week) பத்திரிகை நிருபர் லட்சுமி சுப்பிரமணியன் கன்னத்தை தட்டிய விவகாரத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சம்மந்தப்பட்ட லட்சுமி சுப்பிரமணியத்திடம் எழுத்துப்பூர்வமாக பகிரங்க மன்னிப்பு கேட்டு விட்ட நிலையில், சட்டநாதபுரம் வெங்கடராமன் சேகர் என்கின்ற நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் அவர் நண்பர் திருமலை என்பவர் அவரது முகநூலில் பதிவிட்டு இருந்த தகவலை, தன் முகநூல் பக்கத்தில் இணைத்திருந்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சார்பில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலீசார், நடிகர் எஸ்.வி.சேகர் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Hon’ble Thiru. Justice A.D. Jagadish Chandira.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (28.04.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் எஸ்.வி.சேகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரகுநாதன் எழுந்து நீதிபதியிடம் கடந்த முறை நீங்கள் பதில் மனு தாக்கல் செய்யச் சொன்னீர்கள் என்றார். உடனே மற்ற வழக்கறிஞர்கள் நாங்கள் இடைநிலை மனு மூலம் (Intervention Petition) எங்கள் ஆட்சேபனையைச் சொல்லியுள்ளோம், அதையும் இத்தோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றனர்.

பெண் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் வந்திருந்து நாங்களும் அது போல் மனு தாக்கல் செய்துள்ளோம் எங்கள் தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று பெண் வழக்கறிஞர்கள் சங்க செலாளர் ஆதிலட்சுமி கூறினார்.

சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் தலைவர் அன்பழகனின் வழக்கறிஞர் குமாரதேவன், இந்த வழக்கில் தான் இரண்டு இடைநிலை மனுக்கள் தாக்கல் செய்து அது பட்டியலில் உள்ளது என்றும், நான் வாதாட தயார் என்றார். புகார்தாரர் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளார் வழக்கறிஞர் என்று பலர் அது போல் கூறினர். 

அனைத்தையும்   கவனமாக கேட்ட நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, நடிகர் எஸ்.வி.சேகர் வழக்கறிஞர் ரகுநாதனிடம், “கடந்த வழக்கு விசாரணையில் நீங்கள் இல்லை. அப்போது நான் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பதில் மனு தாக்கல் செய்யத்தான் இன்று வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், பல இடைநிலை மனுக்கள் வந்திருக்கும் போது, எல்லாவற்றையும் விசாரிக்காமல் முடிவெடுக்க முடியாது. இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்றார். உடனே ரகுநாதன் 7 மனு இன்று பட்டியலில் உள்ளது. ஆனால், 4 மனுக்கள் தான் எங்களிடம் கொடுத்துள்ளார்கள் என்றார்.

உடனே வழக்கறிஞர்கள் நாங்கள் எல்லாம் முறைப்படி எங்கள் மனுக்களை நடிகர் எஸ்.வி.சேகர் தரப்புக்கு கொடுத்து விட்டே தாக்கல் செய்துள்ளோம் என்றார்கள்.

இந்த வழக்கில் நான் எந்த உத்தரவும் போட முடியாது. நீங்கள் எதிர்வரும் எந்த விடுமுறைக்கால நீதிமன்றத்தையும் அணுகி உத்திரவு வாங்கிக் கொள்ளலாம். இல்லை என்றால், நான் கோடை விடுமுறை கழித்து விசாரணையை ஒத்தி வைக்கிறேன் என்றார் நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா.

உடனே நடிகர் எஸ்.வி.சேகர் வழக்கறிஞர் S.S.சத்தியநாராயணன், மூத்த வழக்கறிஞர் ரகுநாதனிடம், அப்படியானால், அதுவரை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை வாங்குங்கள் என்றார். நீதிபதி தான் எந்த உத்தரவும் கொடுக்க முடியாது என்கிறார் நான் எப்படி மீண்டும் கேட்க முடியும்? வேண்டுமானால் மீண்டும் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு நீதிபதியை நோக்கி அதுவரை… என்று ஆரம்பித்தபோதே, நான் இந்த வழக்கில் அப்படி எந்த உத்தரவும் போட முடியாது என்று நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கைவிரித்தார். இதனால், நடிகர் எஸ்.வி.சேகர் தரப்பினர் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காவல்துறையின் நேர்மையை நிரூப்பிக்கும் தருணம் நெருங்கிவிட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக அரசுக்கு மிகப் பெரிய களங்கத்தை இது ஏற்படுத்தும். பல்வேறு தவறான யூகங்களுக்கும் இது வழிவகுத்துவிடும்.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை தமிழக உள்துறை அமைச்சகம் உறுதிசெய்யுமா? 

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. k.venkataraman April 29, 2018 11:27 am

Leave a Reply