திருவெறும்பூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், மென்மை திறனை மேம்படுத்தும் வகையிலும், ஒரு நாள் பயிற்சி முகாம் காட்டூர், முத்துமணி திருமணம் மண்டபத்தில் இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணிவரை நடைப்பெற்றது.

இப்பயிற்சி முகாமை திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சேகர் தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சியில் நவல்பட்டு, திருவெறும்பூர், பாய்லர் பிளாண்ட், துவாக்குடி, காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியாளர் மோகனின் நடவடிக்கை ஒரு பள்ளிக் கூட ஆசிரியரைப் போன்று இயந்திரத்தனமாக இருந்ததே தவிர, முகாமில் கலந்து கொண்ட காவலர்களின் எதார்த்த மனநிலையை புரிந்துக் கொண்டதாகவோ, (அல்லது) அவர்களின் மனச்சுமையை வெளிகொணர்ந்ததாகவோ அமையவில்லை.

இதுப்போன்ற பயிற்சிகளை நடத்துவதற்கு மெத்தப் படித்தவர்களை விட, எதார்த்த வாழ்கையைப் பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள்தான் இதற்கு அவசியம் தேவை.

குழப்பத்தோடும், மன அழுத்தத்தோடும், இங்காவது சற்று நிம்மதி கிடைக்காதா?-என்ற ஏக்கத்தோடும், எதிர்பார்ப்போடும், ஆதங்கத்தோடும் வரும் நபர்களுக்கு அவசியம் தேவையானது அறிவுரையோ, ஆலோசனையோ, ராஜ தந்திரமோ அல்ல….! மாறாக  ஆறுதலும்,  தைரியமும், தன்னம்பிக்கையும்தான்.

ஒரு மனவளப் பயிற்சியென்பது வறண்ட பாலைவனத்தில் கோடைக்காலத்தில் கடுமையான மழை பெய்த பின்பு, அந்த பூமியானது எப்படி குளிர்ந்து காணப்படுமோ, அதுபோல, பிரச்சனையோடு வரும் நபர்களின் மனது அமைதியும், ஆறுதலும், நிம்மதியும் அடைய வேண்டும். அதற்கு அவசியம் தேவை புரிதல்…! அந்த புரிதல் இந்த பயிற்சியாளரிடம் இல்லை.

ஏனென்றால், “வாழ்ந்து விடலாம் என்று சொல்லுமளவிற்கு வாழ்க்கை எளிமையானதும் அல்ல; வாழவே முடியாது என்று சொல்லுமளவிற்கு வாழ்க்கை கடினமானதும் அல்ல; புரிந்துக் கொண்டால் வாழ்க்கை புனிதமானது”.

எனவே, எதிர்வரும் காலங்களிலாவது அனுபவமிக்க சிறந்த ஆற்றுப்படுத்துனர்களைக் கொண்டு இதுபோன்ற பயிற்ச்சி முகாம்களை நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 படங்கள் & வீடியோ: ஆர்.சிராசுதீன்.

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.http://www.ullatchithagaval.com/2018/03/07/32157/

Leave a Reply