அத்தியாயம் 1 – உயிரின் அருமை

மனித உடமைகள் அனைத்திலும் உயிரே மிகச் சிறந்தது. அதற்கு அடுத்தபடியாக ஆரோக்கியம். ஆரோக்கியம் இல்லை யென்றால் வாழ்வின் பயனை அவ்வளவாக எய்த முடியாது : உயிர் இன்பங்களையும் சரியாக அனுபவிக்க இயலாது. இந்த தேகம் ஆரோக்கியமாக இல்லை என்றால் கருதியபடி தான் வாழ முடியுமா? மனம் களிக்கும் செயல்களில் தான் ஈடுபட முடியுமா? விரும்பும் உணவைத்தான் உண்டு சுகிக்க முடியுமா?

நோயாளி வேதனையும் துன்பமும் அடைகிறான். தன் காரியத்தைத் தானே செய்து கொள்ள அவனுக்குச் சக்தி இருக்காது. பிறர் உதவியை நாடுவான். அவர்கள் தங்கள் காரியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவனைக் கவனிக்க வேண்டும். ஊட்டவும் உடுத்தவும் வேறு காரியங்கள் செய்யவும் தங்கள் நேரத்தை அவனுக்காகச் செலவிடுகிறார்கள். இதனால் அவன் பிறருக்கு முதுகுச் சுமையாகிறான்.

நோயாளியினால் வரும் அபாயம்

அத்துடன், நோயாளியினால் அருகில் உள்ளவர்களுக்கும் பல சமயங்களில் கெடுதல் உண்டாகிறது. அனேக நோய்கள் எளிதாகப் பரவக் கூடியவை. குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு வியாதி கண்டால் அவ் வியாதி மற்றவர்களையும் விரைவில் பற்றிக்கொள்வதை நாம் பார்த்ததில்லையா? அந்த வியாதி பல சமயங்களில் வேறு குடும்பங்களுக்கும் பரவிவிடும். பலர் நோய்வாய்ப்பட்டு, வேலை செய்யாமல் போவதால் பொருள் நஷ்டமும் மிகுதியாக உண்டாகிறது. பெரு நஷ்டமான உயிர் நஷ்டமும் ஏற்படுகிறது.

ஆரோக்கியம் கெட்டுவிட்டால் அதை ஒரு நாளில் திரும்பப் பெற முடியாது. “வியாதி வந்தால் என்னவாம்? கொஞ்சம் மருந்து சாப்பிட்டால் போய்விடுகிறது” என்று கருதுவது தவறு. பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்த நீண்ட நாள் ஆகும்; அதிக பிரயாசை வேண்டும். இதைக் கருதிப் பார்த்தால் சமுதாயம் முழுவதும், சமுதாய மக்கள் அனைவரும் ஆரோக்கியத்தை மிகவும் மதிக்க வேண்டும் என்பது புரியும்.

உடம்பை நன்றாகக் கவனித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் முதல் கடமையாகும். தமக்கும் தம் வீட்டாருக்கும் அயலகத்தாருக்கும் தம் தேசத்துக்கும் இவற்றுக்கெல்லாம் மேலாகக் கடவுளுக்கும் கடமை செலுத்த வேண்டும். தேவர்களும், பேய்க் கணங்களும் நோயைப் பிறப்பிக்கின்றன என்று எண்ணுவதும் சீதோஷ்ண மாற்றத்தால் உண்டாவதால் வியாதியை தவிர்க்க முடியாது என்று கருதுவதும் தவறாகும். வாழ்வும் தாழ்வும் தலைவிதிப்பயன் எனவும் எண்ணிவிடக் கூடாது.

வியாதி ஏன் வருகிறது?

ஆரோக்கிய விதிகளை மீறி நடப்பதே நோய் உண்டாவதற்குக் காரணம், அவைகளை அனுசரித்து, உடம்பைச் சரியாகப் பேணி வந்தால், குறைந்த பட்சம் எண்பது சதவிகித நோய்களைத் தவிர்த்து விடலாம். ஆரோக்கிய முறைகளை அனுஷ்டிப்பதால் ஆயுள் நீடிக்கிறது. அவைகளை அலட்சியம் செய்வதால் நோயும் மரணமும் உண்டாகின்றன. நீண்ட ஆயுளை விரும்பாதவர்கள் யார்? நோயையும், மரணத்தையும் விரும்புகிறவர்கள் யார்?

உடம்பைப் பற்றிய அசிரத்தை

infectionசாதாரணமாக உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் வரைக்கும் அதைப் பற்றிய அக்கரை இருக்காது. திடம் குறைந்து, நோய் கண்டு, மரணம் நெருங்கும் போது தான் உடம்பை எப்படிப் பாதுகாப்பது என்கிற கவலை பிறக்கும். பாவம் ! இதனால் என்ன பிரயோசனம்? இந்த உடம்பைப் பற்றி அக்கரை கொள்ள வேண்டிய காலம் இளம் பிராயம். அரோக திடகாத்திரம் வேண்டுமானால் பிறப்பதற்கு முன்னமேயே கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். அதாவது பிறக்கும் குழந்தை நன்றாய் இருக்க, தாய் தந்தையர்கள் தங்கள் உடம்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். நலிந்து, நோய் கொண்ட பெற்றோர்களுக்குப் பலமுள்ள ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதில்லை.

இக்கட்டுரையை வாசிப்போர்களில் பெரும்பாலோர் வயது வந்தவர்களாய் இருக்கலாம். பலர் தேக பலம் குன்றியவர்களாய் இருக்கலாம். சிலருக்கு ஏதாவது நோய் இருக்கும். இவர்கள் எல்லாம் இதில் கணடுள்ள சுகாதார விதிகளைப் படிப்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமாய் இருக்கும் போது, உடம்பைப் பராமரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வதுடன், நோய் வந்துவிட்டால் அதனை நீக்கி, ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்றும் அறிந்திருக்க வேண்டும்.

நோயைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதை அறிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். சாதாரண நோய்களுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். நோய் கடுமையாக இருந்தால், தகுந்த வைத்திய உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நோய்க்கான காரணங்கள்

InDigesionநோய் என்பது தவிர்க்க முடியாத கெடுதல் எனப் பலர் தவறாக எண்ணுகின்றனர். வைத்தியர்களும் விஞ்ஞானிகளும் இன்ன இன்ன வியாதிகள் இன்ன இன்ன காரணங்களால் உண்டாகின்றன என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள். வேண்டிய போஷணை கிடைக்காததால் சில நோய்கள் உண்டாகின்றன் பெரிபெரி இவ்விதமான நோய். நச்சுப் பொருள்கள் உடம்புக்குள் புகுவதால் சில நோய்கள் உண்டாகின்றன. உதாரணமாக, நெருப்புக்குச்சி செய்யும் இடங்களில் பணி புரிவோர்கள் உடம்பிலே பாஸ்வரம் நஞ்சு கலந்து, அதனால் நோய் விளைவதுண்டு. கெட்ட வழக்கங்களாலும் நோய்கள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக அவசரம், அவசரமாக உண்ணும் வழக்கத்தால் அஜீரணம் உண்டாகிறது. பல ரோகங்கள் பாக்டீரியா, வைரஸ், அமீபா, வேறு பூச்சிகள் இவற்றாலே உண்டாகின்றன. தவறான நினைவுகளும் பலப் பல வியாதிகளுக்கு அடிகோலி விடுகின்றன.

மனித இனத்தின் பரம விரோதிகள்

Coldநோய்க் கிருமிகள் தான் மனிதனுக்குப் பரம விரோதிகள். இவைகள் மக்களை தினந்தோறும் இலட்சக் கணக்கில் கொல்லுகின்றன. ஜலதோஷம், ஷயம், நிமோனியா வயிற்றுப்போக்கு வயிற்றுக் கடுப்பு, டைபாயிடு, காலரா, வாய்ப்பூட்டு நோய், வைசூரி, சின்னம்மை, கக்குவான், இருமல், மலேரியா, குஷ்டம், பிளேக் முதலான எத்தனையோ வியாதிகள் இந் நோய்க் கிருமிகளால் தான் உண்டாகின்றன.

நோய்க் கிருமிகள் இரு வகைப்படும். ஒரு வகை பயிர் இனத்தைச் சேர்ந்தவை. மற்றொரு வகை பிராணி இனத்தைச் சேர்ந்தவை. கண்ணால் பார்க்க இயலாத வண்ணம் அத்தனை சிறியவை இந்த நோய்க் கிருமிகள். ஆயிரம் மடங்கு பெரிதாக்கிக் காட்டும் பூதக்கண்ணாடியால் பார்த்தாலும் இவைகளில் பல கடுகு போலத் தான் தோன்றும்.

நோய்க் கிருமிகள் வெகு வேகமாக விருத்தியடைகின்றன. அனுகூலமான சு10ழ்நிலையில் காலரா அல்லது டைபாயிடு கிருமி ஒன்றிலிருந்து பத்து மணி நேரத்தில் பத்து லட்சம் கிருமிகள் தோன்றக் கூடும். மிக மிகச் சிறியதாக இருப்பதாலும் விரைவில் எண்ணிக்கையில் பெருகிவிடுவதாலும் இவைகள் எங்கும் பரந்து காணப்படுகின்றன. ஆறு, குளம், கிணறு இவற்றின் நீரிலும் தெருப் drainageபுழுதியிலும், வீட்டுச் சுவர், தரை இங்குள்ள தூசியிலும் இந்தக் கிருமிகள் காணப்படுகின்றன. நாம் உண்ணும் உணவிலும், பருகும் பானங்களிலும் கூட இவைகள் இருக்கின்றன. ஜன நெருக்கமுள்ள இடங்களில் எங்கு பார்த்தாலும் நோய்க் கிருமிகள் தென்படும். ஆகையால் இந்தக் கிருமிகள் உடம்புக்குள் நுழையாத வண்ணம் பார்த்துக் கொள்வது எப்படி என்றும் நுழைந்துவிட்டால் அவற்றை ஒழிப்பது எவ்விதம் என்றும் ஒவ்வொருவதும் தெரிந்து கொள்ள வேண்டும். பின்வரும் அத்தியாயங்களில் இவ்விஷயங்கள் விவரமாகச் சொல்லப் படுகின்றன.

அத்தியாயம் 2 – உடல் அமைப்பு
நாடி லச்சணங்கள்