கடத்தல் தங்கத்தை களவாடிய சுங்க இலாகாவினர்!- திருச்சியில் நடைபெற்ற தில்லு முல்லு!

try customs.jpg1

try customs

விமானம் மற்றும் கடல் வழியாக வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள மண்டல சுங்க இலாகா அலுவலகத்தில் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

பறிமுதல் செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு குறைவாக இருந்தால் வரியை கட்டி விட்டு தங்கத்தை உரியவர்கள் எடுத்து செல்லலாம். அவ்வாறு எடுத்து செல்லாவிட்டால் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும். ரூ.1 கோடியை விட கடத்தி வரப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருந்தால் கடத்தி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை இங்குள்ள லாக்கரில் வைக்கப்படும்.

திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டையில் காரில் கடத்தி சென்ற போது பறிமுதல் செய்யப்பட்ட 40 கிலோ தங்கம் மற்றும் திருச்சி விமான நிலையத்திற்கு சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 60 கிலோ தங்கம் என மொத்தம் சுமார் 100 கிலோ தங்கம் அங்குள்ள லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது.

goldஇந்த நிலையில் திருவாரூரில் பிடிபட்ட 18.5 கிலோ தங்கம் தொடர்பான வழக்கு திருவாரூர் கோர்ட்டில் கடந்த 17–ந்தேதி விசாரணைக்கு வந்ததால் அந்த தங்க கட்டிகளை ஒப்படைப்பதற்காக சுங்க இலாகா திருச்சி மண்டல ஆணையர் ஜானி மற்றும் அதிகாரிகள் லாக்கரை திறந்து பார்த்த போது அங்கு 18½ கிலோ தங்கத்திற்கு பதிலாக 4½ கிலோ தங்கம் மட்டும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர்.

திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர்.

இது குறித்த புகாரின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் ஜெயந்தி, திருச்சி கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் (குற்றம்-CRIME) அருள்அமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயந்தி.

திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயந்தி.

விசாரணையில் லாக்கரை உடைக்காமல் அதை திறந்து அதில் இருந்த தங்கத்தை எடுத்திருப்பதால் சுங்க இலாகா அதிகாரிகள் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

மேலும் அங்குள்ள பல லாக்கர்களிலும் உள்ள தங்க கட்டிகள் இருப்பு சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். கணக்குகளை தணிக்கை செய்த அதிகாரிகள் குழு பாதுகாப்பு பெட்டக பொறுப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் துறை ரீதியான கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதிலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று மேலும் சந்தேகம் எழுந்ததால் அவர்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்தால் தான் முழு விவரமும் வெளிவரும் என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து சுங்கத்துறை ஆணையர் ஜானி, 14 கிலோ தங்க கட்டிகள் மாயமானது தொடர்பாக சி.பி.ஐ. போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணையை விரைவில் தொடங்க உள்ளனர்.

அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பட்டியலை தயாரித்து லாக்கர் சாவி வைத்திருந்த அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த உள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் அங்குள்ள காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்தும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

ஏற்கனவே திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வரி விதிப்பில் முறைகேடு நடப்பதாக கூறி சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி 6 அதிகாரிகளை கைது செய்து மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 492 நட்சத்திர ஆமைகளை 5 சூட்கேசுகளில் அடைத்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 பேருக்கு விமான நிலைய கார்கோ பிரிவு ஊழியர்களான தனசேகர், சதீஷ் ஆகியோர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்த 2 நாட்களில் 2 பேரும் விஷம் குடித்ததாக கூறப்பட்டது. இதில் தனசேகர் இறந்து விட்டார். இதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் கடந்த 17–ந்தேதி இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த டைகர் ஏர்வேஸ் விமானத்தில் தொண்டியை சேர்ந்த நவாஸ்கான் (25) என்ற வாலிபர் 7 கிலோ தங்கத்தை கடத்தி வந்தார். அவரது கடத்தலுக்கு விமான நிலைய சுகாதார பிரிவு அதிகாரி நடராஜன் என்பவர் உதவியது தெரிய வந்ததால் 2 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே சுங்கத் துறை அலுவலகத்தில் 14 கிலோ தங்கம் மாயமான சம்பவத்திலும் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளவன் இல்லாமல், திருடர்கள் உள்ளே வர முடியுமா? கை புண்ணுக்கு  கண்ணாடி தேவையா?

பாவம், எந்த அப்பாவியை சிக்க வைத்து  பிரச்சனையை முடிக்க போகிறார்களோ?

-கே.பி.சுகுமார்.