இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருக்கு, கோடாரி வெட்டு! ஆபத்தான நிலையில் அறுவைச் சிகிச்சை!

வெலி ராஜூ @ பிரியந்த சிறிசேன

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் வெலி ராஜூ @ பிரியந்த சிறிசேன.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் வெலி ராஜூ @ பிரியந்த சிறிசேன.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் வெலி ராஜூ @ பிரியந்த சிறிசேனவை, லக்மால் துஷான் (வயது 24) என்பவர், கோடாரியால் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். 26.03.2015 இரவு 7.00 மணியளவில் பொலனறுவை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த பிரியந்த சிறிசேன, முதலில் பொலனறுவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவரது தலையின் பின் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதால், கவலைக்கிடமாகக் காணப்பட்டார். இதனால், மேல்சிகிச்சைக்காக, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பிரியந்த சிறிசேனவை தாக்கியதாக கூறப்படும் லக்மால் துஷான், பக்கமுன போலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

லக்மால் துஷான், பிரியந்த சிறிசேனவின் நண்பர் என்றும், இருவருக்கும் இடையிலான சொந்தப் பிரச்சினையையொட்டி எழுந்த கோபமே, இத்தாக்குதலுக்குக் காரணம் என்றும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலநறுவை பகுதியில் சட்டவிரோத மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு பிரியந்த சிறிசேனதான் காரணம் என்றும், குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்த மணல் கொள்ளை தொடர்பாக பிரியந்த சிறிசேனவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருந்தார் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப அரசியலில் இருந்து விடிவு காலம் கிடைத்த விட்டதாக  நினைத்த இலங்கை மக்களுக்கு, மைத்திரிபால சிறிசேன ஆட்சியிலும் இது தொடரும் போல் இருக்கிறது.

-எஸ்.சதிஸ் சர்மா.