அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வருமான வரித்துறை வழக்கில் சமரசம்! 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்தது!

jayalalithaa

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்தது.

ஜெ.ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் கடந்த  1991 முதல் 1993 ஆம் ஆண்டு வரையிலான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும், இந்த இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனமும் வருமான வரி செலுத்தவில்லை என்றும் கூறி, வருமான வரித்துறை உதவி ஆணையாளர் சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 1997ஆம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருமான வரிச் சட்ட விதிகளின்படி, தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையை அபராதத்துடன் சேர்த்து செலுத்துவதற்கு தயாராக உள்ளதாக வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலுக்கு, ஜெ.ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த சமரச மனுவை பரிசீலித்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, அந்த மனுவை ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து, இந்த இருவரும்  வருமான வரித்துறை அதிகாரிகளின் உத்தரவின்படி, அபராதத்துடன், வருமான வரி தொகையை செலுத்தி விட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமான வரித் துறை சிறப்பு வழக்கறிஞர் ராமசாமி ஆஜராகி, ஜெ.ஜெயலலிதா சசிகலா மற்றும் சசி எண்டர்பிரைஸ் ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சமரச மனுவை வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரல் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனவே, இந்த நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்து மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு  வந்தது.

-ஆர்.அருண்கேசவன்.