தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தேர்வைப் பார்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்!

21.12.2014 - DCP1 DCP2 DCP3

தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய 4,963 காலி பணியிடங்களை குரூப்-4 தேர்வு மூலம் நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் குரூப்-4 எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. நேர்முக தேர்வு இல்லாமல், கல்வி மற்றும் தொழில்நுட்ப சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த உடனே வேலை கிடைத்துவிடும் என்பதால், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான தேர்வு நேற்று (21.12.2014) தமிழகம் முழுவதும் 4,448 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 263 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வருபவர்களுக்கு சிறப்பு பஸ்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையத்தின் உள்ளே செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 10½ லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 38,816 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதில் 32,379 பேர் இத்தேர்வில் கலந்துக் கொண்டனர். மீதமுள்ள 6,437 பேர் இத்தேர்வில் கலந்துக் கொள்ளவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ரவி குமார் தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டார்.

– பி.கணேசன்@ இசக்கி.