தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பா.ம.க. விலக வேண்டும் : சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை! பா.ம.க. தொண்டர்கள் கொந்தளிப்பு!

s.swamy

s.swamy statement

பா.ம.க. ராமதாஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்றும், விடுதலை புலிகள் மற்றும் தலித்தை தொடர்புப்படுத்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி  கருத்து தெரிவித்துள்ளார். இதை  அறிந்த பா.ம.க. தொண்டர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.

சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து என்றும், அகில இந்திய தலைவரிடமோ, மாநில தலைவரிடமோ வரும் கருத்து தான் அதிகாரப்பூர்வமான கருத்து என்றும், எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. தொடர்ந்து அங்கம் வகித்து கொண்டு தான் இருக்கிறது என்றும், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமி மீது, பிரதமர் நரேந்திர மோதியோ, அகில இந்திய பா.ஜ.க. தலைமையோ, அல்லது மாநில பா.ஜ.க. தலைவரோ இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?

பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை, சுப்பிரமணியன் சுவாமியை  தமிழகம் பக்கமே தலைக்காட்ட விடாமலும், தமிழகத்தைப் பற்றி வாய் திறக்காமலும் பார்த்துக்கொண்ட பா.ஜ.க. தலைமை, பதவிக்கு வந்தவுடன் சுப்பிரமணியன் சுவாமியை ஆடவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது. கூட்டணி கட்சி தலைவர்களை அமானப்படுத்துகிறது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவுக்கு ஆதரவாக தான் நரேந்திர மோதியின் ஆட்சி நடைபெறுகிறதே தவிர, இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

இனிமேலும் இந்த கூட்டணியில் பா.ம.க நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பா.ம.க. தலைமை விரைவில் முடிவெடுக்கும் என்கிறார்கள் பா.ம.க. தொண்டர்கள்.

-ஆர்.அருண்கேசவன்.