2ஜி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை காப்பாற்ற முயன்ற சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்ஜித் சின்கா, வழக்கை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து நீக்கம்! -உச்ச நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல் இணைப்பு!

சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்ஜித் சின்கா

சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்ஜித் சின்கா

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை காப்பாற்ற முற்படுகிறார் என்ற சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்ஜித் சின்காவுக்கு எதிரான புகாரில், நம்பகத்தன்மை உள்ளது. எனவே, வழக்கு விசாரணையில் இருந்து அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் 2ஜி வழக்கை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து ரஞ்ஜித் சின்கா நீக்கப்பட்டுள்ளார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலரை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்ஜித் சின்கா காப்பாற்ற முற்படுகிறார் என, டில்லியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2ஜி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பலர், சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்ஜித் சின்கா வின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றனர் என்பதே, வழக்கின் பிரதான குற்றச்சாட்டு.

அத்துடன், ரஞ்ஜித் சின்கா வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்த, பார்வையாளர் பட்டியலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நிலையில், 20.11.2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து

Hon'ble Mr. Justice Madan B. Lokur

Hon’ble Mr. Justice Madan B. Lokur

Hon'ble Mr. Justice Arjan Kumar Sikri

Hon’ble Mr. Justice Arjan Kumar Sikri

அப்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் லோகூர், அர்ஜன் குமார் சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விபரம்:

 2ஜி வழக்கை விசாரித்த அதிகாரி ரஸ்தோகியை மாற்றியது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல். தற்போது, நீதிமன்ற அறையில், சி.பி.ஐ. அதிகாரிகள் அதிக அளவில் அமர்ந்துள்ளனர். இது சரியானதல்ல.

சி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவரே, அரசு சார்பற்ற அமைப்புக்கு, சில விவரங்களை கொடுத்து, கரும்புள்ளியாக செயல்பட்டுள்ளார் என இயக்குனர் ரஞ்ஜித் சின்கா தெரிவித்த கருத்தும், சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்ட சில தகவல்களும், முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.

அதாவது, ரஞ்ஜித் சின்கா குறிப்பிட்ட அந்த அதிகாரிக்கு எதிராக, ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும் என, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞரே கூறி உள்ளார்.

அதேநேரத்தில், குறிப்பிட்ட அந்த அதிகாரியை, நான் ஒரு போதும் சந்தித்ததில்லை. அவரிடம் இருந்து எந்த ஆவணங்களையும் பெறவில்லை என, அரசு சார்பற்ற அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

ஒரு அதிகாரியின் பணியை, எந்த வகையிலும் களங்கப்படுத்தக்கூடாது. எனவே, இந்த பிரச்னையை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். சி.பி.ஐ.யில் பணியாற்றும் ஒரு அதிகாரியை கரும்புள்ளி என, இயக்குனர் ரஞ்ஜித் சின்கா தெரிவித்திருக்கக் கூடாது.

இதிலிருந்தே 2ஜி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிலரை, காப்பாற்ற முற்படுகிறார் என, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்ஜித் சின்காவுக்கு எதிராக, அரசு சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ள புகாரில்  நம்பகத்தன்மை உள்ளது. மேலோட்டமாக பார்த்த மாத்திரத்தில் இது தெரிகிறது. இது நல்ல விஷயம் அல்ல. ரஞ்ஜித் சின்காவின் பல செயல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் இருந்து, இயக்குனர் ரஞ்ஜித் சின்கா ஒதுங்கி இருக்க வேண்டும்.

 இந்த வழக்கை விசாரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் மூத்த அதிகாரியே, இந்த வழக்கை பொறுத்தமட்டில் சி.பி.ஐ. இயக்குனர் போல செயல்பட வேண்டும்.

சி.பி.ஐ. இயக்குனருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு, ஆதாரமான ஆவணங்களை கொடுத்தவரின் பெயரை வெளியிட வேண்டும் என வழக்கு தொடர்ந்த, அரசு சார்பற்ற அமைப்புக்கு பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது.

இதற்கு மேல், இந்த வழக்கில் விரிவான உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை. அப்படி பிறப்பிப்பது சி.பி.ஐ. அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ரஞ்ஜித் சின்கா இன்னும் 12 நாளில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம்.

-டாக்டர் துரைபெஞ்சமின்,

ஆசிரியர்.

2G1 copy

2G2 copy 2G3 copy 2G4 copy 2G5 copy 2G6 copy 2G7 copy

 -டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in