செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்!

NEWS 1 IMAGE 01

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வருகிற டிசம்பர் மாதம் 26-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் திருவண்ணாமலை, மணலூர்பேட்டை சாலை, ஸ்ரீசண்முகா கலை அறிவியல் கல்லூரியில் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 22-வது மாநில மாடு நடைபெறுகிறது.

அது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பள்ளி நிர்வாக குழு தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.

விழுப்புரம் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழும செயலாளர் பழனிவேலு, பொருளாளர் லோகையன், விவேகானந்தா கல்லூரி செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் ராமமூர்த்தி வரவேற்று பேசினார்.

விழாவில் மாநாட்டுக்குழு செயலாளர் சுவாமி ராமானந்தர் கலந்து கொண்டு பேசுகையில் ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் நாம் சரணாகதி அடையும்போது நம்மை துன்பங்களிலிருந்து தடுத்தாட்கொள்வார்கள்.

நமது நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து நமது செல்வங்களை கொள்ளையடித்து நமது நாட்டை ஏழ்மை நாடு என கேலி பேசிய காலத்தில், நமது நாட்டின் பெருமை இந்து மத பெருமை, நமது கலாச்சாரம் பண்பாடுகளை அந்த நாடுகளுக்கே சென்று சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.

தர்மத்தை பிரித்து உணரும் 6 அறிவுகொண்ட மனிதனுக்கு 7 பிறவிகள். தான் மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கும் மனிதன் முதல் பிறவி, தானும், தன் உறவினர் மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பவன் இரண்டாவது பிறவி, இந்த வரிசையில் 6-வது பிறவியாக பரிபூரண உலக சிந்தனை மட்டுமே உடையவர்கள் ஞானிகள்.

மேலை நாடுகளில் செல்வம், அறிவியல் போன்றவை பெரியதாக பேசப்படும். ஆனால், நமது நாட்டு ஆன்மீகம், சமயம், துறவு இவை உலகம் போற்றக்கூடியது.

உலகம் முழுக்க உள்ள இயக்கம் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம். வயதானவர்களால் நல் உறைகளை கேட்கிறபோது ஆத்ம இன்பம், மன அமைதி மட்டுமே அடைய முடியும்.

ஆனால், ஆன்மீக மாநாடுகளில் ஆசிரியர்கள், கள்ளம் கபடமற்ற இளைஞர்கள் கலந்து கொள்ளுகிறபோது நமது கலாச்சாரம், தேசம் செப்பனிக்கப்படுகிறது.

இன்று இளைஞர்கள் கெட்டுப்போக பல வழிகள் உள்ளது. அதிலிருந்து தப்பிக்க இதுபோன்ற ஆன்மீக மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

தேசத்தை புணர் நிர்மானம் செய்யும் மாநாடு இதுவாகும். எனவே, செங்கம் வட்டத்திலிருந்து அதிக ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆத்மார்த்தமான உணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

மேலும், கூட்டத்தில் குயிலம், ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஷ்வரா பாபு, ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன், விவேகானந்தர் உழவர் மன்ற தலைவர் நாகராஜ், செங்கம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகர், புதுப்பாளையம் சாரதா பள்ளி செயலாளர் பழனி, பேட்டை செந்தில், கடலாடி ஜெயபிரகாஷ், பரமனந்தல் பழனி, ஆசிரியைகள் தமிழரசி, கிரிஜா, புகைப்பட கலைஞர்கள் சங்கம் மகேந்திரன் ஆகியோர் பேசினர். முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் கோபன்னா நன்றி கூறினார்.

– செங்கம் மா.சரவணக்குமார்.