இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

INDONESIA_

இந்தோனேசியாவில் இன்று (15.11.2014) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழ வாய்ப்பு உள்ளது.

பிலிப்பைன்ஸ், பபுவா நியூகினியா ஜப்பான், தைவான் மற்றும் தென்பசிபிக் தீவுகளை சுனாமி தாக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில், முதல் சுனாமி அலை அடுத்த 6 மணி நேரங்களில் எழலாம் என்றும் ஆரம்ப அலைகள் பெரியதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவிற்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 -ஆர்.மார்ஷல்.