தீ விபத்தில்லா தீபாவளி : தீயணைப்பு படையினர் விழிப்புணர்வு கூட்டம்!

NEWS 1 IMAGE 01 NEWS 1 IMAGE 02திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தீயணைப்பு நிலையம் சார்பில் மகரிஷி மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பள்ளி தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

நிறுவனர் புவனேஷ்வரி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர் கார்த்தி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் செங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார்.

தீ விபத்துகள் ஏற்பட்டால் அதை அப்பகுதி பொது மக்கள் ஒன்று சேர்ந்து அணைக்க முயற்சிக்க வேண்டும். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் போது விபத்து நடந்த இடத்தை பதட்டமின்றி தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

மாணவர்கள், பொது மக்கள் தீயணைப்பு வாகனம் வரும் போது அதன் அபாய சத்தம் கேட்டதும் வாகனம் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தி தரவேண்டும்.

தீபாவளிக்கு பெரியவர்கள் முன்னிலையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். நூல் துணிகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளுடன் தீக்குச்சி போன்றவற்றை உடன் வைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்தார்.

தொடர்ந்து தீயணைப்பு படையினர் அடுக்கு மாடியில் தீ விபத்து ஏற்பட்டால் அந்த கட்டிடத்தில் இருப்பவர்களை மீட்பது, குடிசைகள் தீப்பற்றி எரிந்தால் அணைப்பது போன்றவற்றை செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

-செங்கம் மா.சரவணக்குமார்.