காவல்துறையினரை மிரட்டும் மணல் கொள்ளையர்கள்! தென் மாவட்டங்களில் நடைபெறும் திகில் சம்பவங்கள்…!

Sign_board_of_Thamirabarani_River

பாண தீர்த்தம், தாமிரபரணி ஆறு.

பாண தீர்த்தம், தாமிரபரணி ஆறு.

 

thamiraparani

தாமிரபரணி ஆறு பொதிய மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. பொதிகை மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் இந்த நதி 70 மைல் நீளமுடையது. இந்நதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து, விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன. அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை ‘தாம்ரபர்ணே’ என்று குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் திருநெல்வேலி வட்டார வழக்காகவே இன்று வரை இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் ஆன்மீகத்தின் அடையாளமாகவும், புனித நதியாகவும், புண்ணிய தீர்த்தமாகவும் போற்றிப் புகழப்பட்ட தாமிரபரணி ஆறு! தற்போது திருட்டு மணல் அள்ளுபவர்களின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது.

தாமிரபரணி ஆற்றின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து வரும் நிலையில், ஆற்றின் இன்றைய நிலையை பார்த்தால் அனைவருக்குமே அதிர்ச்சியாக உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என்று கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்திருப்பது திருட்டு மணல் அள்ளுபவர்களுக்கு செல்வம் கொழிக்கும் இடமாக மாறிவிட்டது.

மாமுல் வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள்! எங்களை மடக்கி பிடிக்கவோ, மாட்டிவிடவோ முயற்சித்தால், சாதிப் பிரச்சனையை உருவாக்கி உங்களை தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம்! இல்லையென்றால், தடம் தெரியாமல் அழித்து விடுவோம் என்று திருட்டு மணல் அள்ளுபவர்கள் காவல்துறையினரை பகிரங்கமாகவே மிரட்டி வருகின்றனர். இதனால் நமக்கு ஏன் வம்பு என்று கொடுப்பதை வாங்கிக் கொண்டு, பெரும்பாலான அதிகாரிகள் கண்டும் காணாமலையே காலத்தை கடத்தி வருகின்றனர்.

பாபநாசத்தில் தொடங்கி முக்காணி வரையில் ஆற்றிலிருந்து திருட்டு மணல் அள்ளுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இன்று நேற்று அல்ல காலம் காலமாக திருட்டு மணல் அள்ளியே பழக்கப்பட்டவர்களால் அதை நிறுத்த முடிவதில்லை. தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை குறிப்பாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து முக்காணி வரையில் இரண்டு கரைகளிலும் திருட்டு மணல் அள்ளுவது வழக்கமான ஒன்றாகும். திருட்டு மணல் அள்ளப்படுவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மாதந்தோறும் கவனிக்க வேண்டியவற்றை கவனித்து கொள்வதால் திருட்டு மணல் வியாபாரம் கொடி கட்டிப்பறக்கிறது. சிலருக்கு ஏதோ அதுதான் தனது முழுநேர பணி என்பது போல இரவு பகலாக மணல் அள்ளுவதும் உண்டு.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ராஜ் என்கிற ராஜ்பாண்டியன் த/பெ. சுந்தராஜ் இவர் திருட்டு மணல் அள்ளும் கும்பலுக்கு முக்கிய நபராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வாகனங்களிலும் திருட்டு மணல் அள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து திருட்டு மணல் கடத்தும் போது காவல் துறையினரிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக மணல் ஏற்றி வரும் வாகனங்களுக்கு முன்பும், பின்பும் இவருடைய ஆட்கள் எஸ்கார்ட் வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Rajpandiyanஇவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதாவது 02.06.2014 அன்று இவருக்கு சொந்தமான TN-76 B 3306 (407 VAN) என்ற வாகனத்தில் மணல் திருட்டில் ஈடுப்பட்டதற்காக முரப்பநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணக்கரை என்ற இடத்தில் காவல்துறையினால் கைப்பற்றபட்டு இவரோடு சேர்த்து 7 நபர்கள் மீது கலகம் விளைவித்தல், கொலைமுயற்சி, பொது ஊழியர்களுக்கு எதிரான வன்முறை, திருட்டு ஆகிய குற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. (CR.NO:121/14 SEC:121/14 U/S 147,307,353,379 IPC R/W 21(1)MM ACT) சம்பவத்தன்று ஜே.சி.பி-1, TN20 AQ 7194 , TN 01 W 3836, TN-76 B 3306 (407 VAN) ஆகிய வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதே போல் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கார்த்திக் த/பெ. பரமசிவதேவர் இவரோடு சேர்த்து 3 நபர்கள் மீது ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த ஆண்டு 30.12.2013 அன்று திருட்டு மணல் கடத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. (CR.NO:374/13 SEC:379 IPC R/W 21(1) MM ACT) சம்பவத்தன்று TN 69 AA 5568 TATA ACE வாகனமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

திருட்டு மணல் ஏற்றிச் செல்லும் போது பல காவல்நிலைய எல்லைகளை தேவையின் நிமித்தமாக கடந்து செல்ல வேண்டி இருப்பதால் சில நேரங்களில் ஒரு சில நேர்மையான காவல்துறை அதிகாரிகளின் பார்வையில் சிக்கி கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையும் ஏற்படுவதுண்டு.

சில நேரங்களில் சினிமாவில் வருவதை போல மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலிஸ் ஜீப்பில் விரட்டி சென்று பிடிப்பதும் உண்டு. இதுப்போன்ற தருணங்களில் போலிஸ் ஜீப் டிரைவர்களின் முழுமையான அர்பணிப்பும், ஒத்துழைப்பும் இருந்தால் மட்டும்தான் மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களை பிடிக்க முடியும். இதனால் போலிஸ் ஜீப் டிரைவர்கள் மீது மணல் திருட்டில் ஈடுப்படும் நபர்களுக்கு எப்போதுமே வெறித்தனமான கோபம் இருக்கும்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல்நிலையத்திலிருந்து மாற்றலாகி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக செல்வம் என்பவர் பொறுப்பு ஏற்றார்.

வந்ததும் முதல் வேலையாக செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு மணல் கடத்தும் நபர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியதோடு, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜீப்பில் ரோந்தும் வரத் தொடங்கினார்.

இதற்கு காவல் நிலைய ஜீப் டிரைவர் லெட்சுமணன் முழுமூச்சுடன் ஆய்வாளர் செல்வத்திற்கு உதவிகரமாக இருந்து செயல்பட்டு வந்தார். அவற்றின் விளைவு! மணல் திருடும் நபர்களின் வருமானத்தில் மண் விழ தொடங்கியது.

இதனால் விரக்தியின் விளிப்பிற்கே சென்ற திருட்டு மணல் அள்ளும் கும்பலுக்கு முக்கிய நபராக இருக்கும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ராஜ் என்கிற ராஜ்பாண்டியன் த/பெ. சுந்தராஜ், கார்த்திக் த/பெ. பரமசிவதேவர் ஆகிய இருவரின் தலைமையிலான கும்பல், எப்படியாவது காவல் ஆய்வாளர் செல்வத்தையும், காவல் நிலைய ஜீப் டிரைவர் லெட்சுமணனையும், இந்த காவல் நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால், நாம் நிம்மதியாக தொழில் செய்ய முடியாது என்று முடிவுக்கு வந்ததின் விளைவு, செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வத்தின் மீதும், காவல் நிலைய ஜீப் டிரைவர் லெட்சுமணன் மீதும், வாகனச் சோதனையின் போது சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் ராஜ்பாண்டியன் தூண்டுதலின் பேரில் அவரது நெருங்கிய உறவினர் இராமன் த/பெ.தெட்சணாமூர்த்தி என்பவர் 12.09.2014 அன்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைவர் சென்னை, மனித உரிமைகள் ஆணையம் சென்னை, தென்மண்டல ஐ.ஜி மதுரை, நெல்லை சரக டி.ஐ.ஜி திருநெல்வேலி, உயர்நீதிமன்ற பதிவாளர் மதுரை கிளை, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

ராஜ் என்கிற ராஜ்பாண்டியன் ஆதரவில் இராமன் த/பெ.தெட்சணாமூர்த்தி என்பவர், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு  கொடுக்க வந்தபோது எடுத்த படம்.

ராஜ் என்கிற ராஜ்பாண்டியன் ஆதரவில் இராமன் த/பெ.தெட்சணாமூர்த்தி என்பவர், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தபோது எடுத்த படம்.

DSC_0491(1) DSC_0493

12.09.2014 அன்று வழக்கறிஞர்களின் துணையுடன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாக புகார் மனு அளிக்க சென்ற கும்பலில், திருட்டு மணல் வழக்கில் தொடர்புடைய ராஜ் என்கிற ராஜ்பாண்டியன் த/பெ. சுந்தராஜ், கார்த்திக் த/பெ. பரமசிவதேவர் மற்றும் திருட்டு மணல் அள்ளும் கும்பலுக்கு எஸ்கார்ட் வேலைகளில் ஈடுப்படும் நபர்கள் ஏராளமானோர் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் ஆதரவில்தான் இராமன் த/பெ.தெட்சணாமூர்த்தி என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

புகார் மனு கொடுக்க கூட வந்தவர்களுக்கு அன்று மட்டும் சுமார் 25 ஆயிர ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர். மேலும், தூத்துக்குடியில் மாத பத்திரிகை நடத்தி வரும் ஒருவர் இந்த புகார் மனுவை அனைத்து பத்திரிகையாளர்களின் மின் அஞ்சலுக்கும் அனுப்பி வைத்துள்ளார் என்பது எமது விசாரணையில் தெரிகிறது.

சீனிகிழங்கு திண்ற பன்றியை செவியை அறுத்தாலும் திருந்தாது என்ற பழமொழிக்கு ஏற்ப திருட்டு மணல் அள்ளி பழக்கப்பட்டவர்களை எவ்வளவு தண்டித்தாலும், அதே வேலையைதான் மீண்டும் செய்வார்கள்.

எனவே, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மனது வைத்தால் மட்டும் தான் தாமிரபரணி ஆற்றை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in