திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களை மிரட்டிய, பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள்! மம்தா பானர்ஜி ஆவேசம்!

rail_budget_2014-2015railway budgetஇன்று (08.07.2014) பாராளுமன்றத்தில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரெயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை அவையில் பதிவு செய்தனர். இதனால் பாராளுமன்றத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் எங்களை அடிக்கப் போவதாக மிரட்டுகின்றனர். எங்களை கெட்டவார்த்தையால் திட்டுகின்றனர். நாங்கள் அமைதியாக எங்களது எதிர்ப்பை பதிவு செய்தோம்.  அப்போது பா.ஜனதாவின் ஒரு எம்.பி. குடிபோதையில் பிற உறுப்பினருடன் சேர்ந்து மிரட்டினார். அவர் யார் எனத் தெரியவில்லை. எங்கள் கட்சி பெண் எம்.பி.க்களையும் தாக்க வந்தனர் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.

mamataஇந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் ஆவேசம் அடைந்தார். பாராளுமன்றத்தில் எங்கள் பெண் எம்.பி.க்களை ‘விபச்சாரி’ என்று அழைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார். எங்களது எம்.பி.க்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானது. மக்களுக்கு எதிரான நடவடிக்கையை பா.ஜனதா அரசு நிறுத்தும் வரையில் விமர்சிப்போம். எங்களது ஆக்கபூர்வமான பங்கை தொடர்ந்து ஆற்றுவோம்.

ரெயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களது எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு பதிலாக எங்கள் எம்.பி.க்களை தாக்கியுள்ளனர். எங்களது எம்.பி.க்களை ‘விபச்சாரி’ என விமர்சித்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நரேந்திர மோதிக்கு எதிராக கோஷம் எழுப்பினர் என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதக் கணக்கில் பாராளுமன்றத்தை முடக்கி செய்யாத அட்டுழியத்தை விடவா! திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இன்று செய்து விட்டார்கள்?

நரேந்திரமோதிக்கு எதிராக யாரும் விமர்சனமே செய்யக் கூடாது என்று பாரதீய ஜனதா சொல்வது எந்த வகையில் நியாயம்? இது சர்வாதிகாரம் இல்லையா? இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களையும் சரிசமமாக நடத்துவதுதானே இந்திய இறையாண்மைக்கு அழகு.

பாரதீய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களை பழிவாங்க நினைப்பது எந்த வகையில் நியாயம்? நேர்மையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாத எந்த அரசும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது என்பதை நரேந்திரமோதி தலைமையிலான ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

-எஸ்.சதிஸ்சர்மா.