மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட என்.எல்.சி. ஊழியர் குடும்பத்துக்கு தேர்தல் முடிந்த பிறகு நிச்சயம் நிவாரணம் வழங்கப்படும்: முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாஅறிக்கை

jjமுதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’மத்திய அரசின் நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி ராஜேந்திரன் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரால் அந்த நிறுவன வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது குறித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் தந்திரத்தின் உச்சகட்டம்.

nlc  worker rajaநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்பது ஒரு மத்திய அரசு நிறுவனமாகும். அந்த நிறுவனத்திற்கான பாதுகாப்பினை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வழங்கிக் கொண்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இலை போன்ற தோற்றம் எங்கிருந்தாலும் அதை இரட்டை இலை என்று நினைத்து தேர்தல் ஆணையத் திடம் தி.மு.க. மனு கொடுக்கின்ற சூழ்நிலையில், சில அடிப்படைத் தேவைகள் குறித்து நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாலே, அ.தி.மு.க. தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுகிறது என்று தி.மு.க. புகார் கொடுக்கின்ற சூழ்நிலையில், இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கினால், இதனை பெரிதாக்கி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக புகார் கொடுக்க தி.மு.க. தயங்காது.

அதனால் தான், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்பட வில்லை என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, தமிழக அரசின் சார்பில் யாருக்கும் எவ்வித நிவாரணமும் அளிக்கப் படவில்லை என்பதையும் கருணாநிதிக்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி அளிக்கப்பட்டால், அதற்கு ஒரு களங்கம் கற்பித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்பார் கருணாநிதி. இது போன்ற புகாருக்கு இடம் அளிக்காமல், நிவாரண உதவியை தேர்தல் முடிந்த பிறகு அறிவித்துக் கொள்ளலாம் என்று கருதி, இரங்கல் செய்தியை மட்டும் நான் வெளியிட்டேன்.

பல்வேறு விபத்துகளில், நிகழ்வுகளில் உயிரிழப் போருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நான் நிதியுதவி வழங்கி வருவது மக்களுக்கு தெரியும். ஆனால், அரசியல் ஆதாயம் தேடும் வகையில், அமைச்சர்கள் சென்று பார்க்கவில்லை, நிவாரண உதவி அளிக்கவில்லை என்று ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் கருணாநிதி.

ஊதி, ஊதி பெரிதாக்குவதில் வல்லவர் கருணாநிதி. அதனால் தான், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வளாகத்திற்குள், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, உள்நாட்டு போர் நிகழ்ந்திருப்பது போல அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தப் பிரச்சனையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை கருணாநிதி கண்டித்து இருக்க வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன், மாநில காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிர்வாகத்திடமும், தொழிலாளர் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், பிற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் எனது தலைமையிலான அரசு தேர்தல் முடிந்த பிறகு நிச்சயம் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.