இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷேவின் மருத்துவர் கார் மீது துப்பாக்கி சூடு!

Eliyantha-

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷேவின் மருத்துவர் எலியந்த வையிட்டின் கார் மீது இன்று (28.02.2014) அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எதிரிசிங்க வீதியில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடைபெற்ற போது மகிந்த ராஜபட்ஷேவின் மருத்துவர் எலியந்த வையிட் அந்த காரில் இல்லை எனவும், அவரது ஓட்டுநர் மட்டும் அதில் இருந்ததாகவும், இதனால் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டவில்லை எனவும் தெரிகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பின்னர் தப்பிச் சென்றுள்ளனர். அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளின் உதவியையும், விசாரணையையும் பொலிஸார் பெற்றுள்ளனர்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர் மீது துல்லியமாக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தும் நோக்குடன் விசேட திறமை கொண்ட நபர்தான் இதனை மேற்கொண்டிருக்கலாம் என சிரேஷ்ட உதவி இரசாயன பகுப்பாய்வாளர் பி.டி. மடவள தெரிவித்துள்ளார்.

கார் மீது மூன்று துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. அவை சரியான இலக்கை நோக்கியே பிரயோகிக்கப்பட்டுள்ளன. காரில் மருத்துவர் எலியந்த பயணிக்கவில்லை. இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

பெல்லன்வில் ரஜமகா விகாரையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த விசேட பூஜை வழிபாடுகளுக்கு தேவையான சில பொருட்களை மருத்துவரின் தாயார் வீட்டிலிருந்து மருத்துவரின் கார் ஓட்டுநர் எடுத்துவந்த போதுதான் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்ய பிரதேசத்தில் உள்ள இரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.